நமது வாழ்க்கையில் ஒவ்வொரு காலகட்டத்திலும் பல்வேறு வகையான அனுபவங்களை பெற்று வருகிறோம், பள்ளி பருவம் முதல் மூப்பு பருவம் வரை ஏதாவது ஒன்றில் அனுபவம் பெற்று கொண்டே இருக்கிறோம். இதற்க்கு முடிவு என்பதே கிடையாது, நாம் பெறும் அனுபவங்களை எந்த வைகையில் எடுத்துக்கொள்கிறோம் என்பது மிக முக்கியம்.
கஷ்டப்படும் நிலை வந்தால் அதை நம்மை மேம்படுத்திக்கொள்ள கிடைக்கும் வாய்ப்பாகவும் நினைக்கலாம் அல்லது ஐயையோ! இவ்வளோ கஷ்டம் வருகிறதே என்று துவண்டு புலம்புபவராகவும் இருக்கலாம்..இதில் ஒருவர் எந்த நிலையில் வருகிறார் என்பதற்கு அடித்தளம் அமைக்கும் முக்கிய காரணி யார் என்று கூறினால் அது நமது அப்பாவாக தான் இருக்கும்.
இதில் நான் கூறிய நிலைகளில் முதல் வகையான நபராக என்னை வளர்த்த என் அப்பாவை பற்றிய இடுகையே இந்த பதிவு.
என் சிறு வயதில் என்னை (தேவையான) கண்டிப்புடன் வளர்த்தவர் என் அப்பா, அப்போது அவர் செய்த செயல்கள் அல்லது நடவடிக்கைகள் எனக்கு எரிச்சலை தந்தாலும் இன்று அது பற்றி நினைக்கும் போது அன்று மட்டும் கண்டிப்புடன் நமது அப்பா இல்லை என்றால் இன்று நாம் எவ்வளவு மோசமாக போய் இருப்போம், அல்லது ஒரு பொறுப்பில்லாமல் போய் இருப்போம் என்று எண்ணம் வருவதை தவிர்க்க முடியவில்லை.
என் அப்பா ரொம்ப பிராக்டிகலான நபர், நடைமுறை பிரச்சனைகளை ஏற்றுக்கொண்டு அதற்க்கேற்ப தன் நடவடிக்கைகளை அமைத்துக்கொள்பவர். தன்னுடைய சிறு வயதிலேயே தன் தந்தை (என் தாத்தா) இறந்ததால் இளமை கொண்டாட்டங்கள் எதுவுமின்றி குடும்ப பொறுப்புகளில் மூழ்கியவர். 40 வருடங்களுக்கு மேலாக கஷ்டத்தை மட்டுமே சந்தித்தவர், ஆனால் தனது எந்த ஒரு கடமையிலும் தவறு ஏற்படாமல் நேர்மையாக நடந்து கொண்டவர், கொண்டு இருப்பவர்.
நாங்கள் பெரியவர்கள் ஆனால் பல சிரமங்களை சந்திக்க வேண்டியது இருக்கும் என்று முன்பே எண்ணி, அப்போது பணம் இருந்தாலும் எங்களை அனாவசியமாக சொகுசாக இருக்க அனுமதித்ததில்லை. அப்போது அது கடுப்பாக இருந்தாலும் இப்போது அதை நினைத்தால் என் அப்பாவை நினைத்து பெருமையாய் இருக்கிறது.
நாங்கள் கடந்த 20 வருடங்களாக என் அப்பாவிற்கு இருந்த பல்வேறு கடமைகளால் பணத்திற்கு பெரும் சிரமப்பட்டோம் தற்போது பரவாயில்லை ஆனாலும் பிரச்சனை உண்டு, என் அப்பா, சென்னையில் நான் தங்கி இருந்த போது என் செலவிற்கு 1500 Rs கொடுக்கவே சிரமப்பட்டார், ஆனால் பணம் கொடுக்க தான் சிரமப்பட்டாரே தவிர அந்த சிரமத்தை எப்படி எதிர்கொள்வது அதை ஒரு படிக்கட்டாக எப்படி மாற்றி கொள்வது என்ற தன்னம்பிக்கையை எனக்கு கொடுக்க தவறவில்லை.
நான் கையில் பணம் இல்லாமல் பல கஷ்டங்களை அனுபவித்து இருக்கிறேன், என் சிறு வயது சந்தோசங்கள் பலவற்றை இழந்து இருக்கிறேன். ஆனால் என்றுமே அதற்காக துவண்டதில்லை, அழுததில்லை. நாங்கள் மிகவும் கஷ்டத்தில் இருந்த போது எங்கள் பஞ்சு மில் தீ பிடித்து பல லட்சம் நஷ்டப்பட்ட போது கூட என் அப்பா கலங்கியதில்லை, அந்த நேரத்தில் பதட்டப்பட்டு இருந்தாலும் அடுத்து என்ன செய்யலாம் என்று தான் யோசித்துக்கொண்டு இருந்தார், நான் என்ன தான் மன உறுதியுடன் இருந்தாலும் இந்த நிகழ்விற்கு பிறகு என் ஊருக்கு சென்று இருந்த போதும் நான் அழவில்லை, ஆனால் என் அப்பா டேய்! அதெல்லாம் ஒன்றுமில்லைடா..சரி ஆகி விடும் என்று கூறிய போது அது வரை அமைதியாக இருந்த நான் அல்லது கட்டுப்பாடுடன் இருந்த நான் என் அப்பா கூறியதை கேட்டு தாங்க முடியாமல் அழுதது இன்று வரை என்னால் மறக்க முடியாது. அப்போது கூட என் அப்பாவிற்கு ஏன் தொடர்ந்து இத்தனை கஷ்டம் என்று தான் அழுதேனே தவிர எங்களுக்கு ஏற்பட்ட நஷ்டத்தை நினைத்தல்ல.
இதை போல பல நிகழ்வுகள், என் அப்பா எனக்கு கொடுத்த தன்னம்பிக்கைகள் மட்டுமே என்னை இந்த அளவிற்கு உயர்த்தியது. கிஷ்கிந்தா வில் கம்ப்யூட்டர் கேம்ஸ் சொல்லிக்கொடுத்த நான் இன்று SWISS வங்கியில் பணி புரிகிற அளவிற்கு உயர்ந்ததற்கு என் அப்பாவின் அணுகுமுறையும் எப்போதெல்லாம் நான் மனசோர்வு அடைகிறேனோ அப்போதெல்லாம் என் மனதை படித்து எனக்கு மன தைரியம் கொடுத்து ஊக்கப்படுத்தியது, நல்ல எண்ணங்களை என்னுள் விதைத்தது மட்டுமே காரணம். வாழ்க்கையில் பணம் சம்பாதிப்பது முக்கியமில்லை, அது இன்று வரும் நாளை போகும், நல்ல மனிதர்களை நண்பர்களை சம்பாதிப்பது தான் முக்கியம் எனவே பணத்திற்கு முக்கியத்துவம் தராதே என்று சொல்லி சொல்லி வளர்த்தவர்.
என்னுடைய பள்ளிப்படிப்பு வரை ஓரளவு கண்டிப்புடன் இருந்தவர், அதன் பிறகு என்னிடம் ஒரு தோழனை போலவே பழகினார், பழகி கொண்டு இருக்கிறார். என் பள்ளிப்படிப்பு முடிந்த பிறகு நான் எடுத்த முடிவுகள் அனைத்தும் என் சுய முடிவே, எந்த விசயத்திலும் தலையிட்டதில்லை. தன்னுடைய ஆலோசனைகளையும் கருத்துக்களையும் மட்டுமே கூறினாரே தவிர நான் சொல்வதை தான் செய்ய வேண்டும் என்று என்னை வற்புறுத்தியதில்லை. கால மாற்றத்தில் நானே என் அப்பாவிற்கு பல யோசனைகளையும் என் கருத்துக்களையும் கூறிய போது ஈகோ பார்க்காமல் இவன் என்ன சொல்வது நாம என்ன கேட்பது என்று இல்லாமல் என் வார்த்தைகளுக்கு மதிப்பு கொடுத்தவர்.
தன் நலம் மட்டுமே பெரிதாக கருதும் உலகிலே, தன் கஷ்டம் தன்னுடன் போகட்டும் தங்கள் பிள்ளைகள் இனியும் கஷ்டப்படக்கூடாது என்று அனைத்து சிரமங்களையும் தன் தோளில் சுமந்தவர், சுமந்து கொண்டு இருப்பவர்.
எங்கள் சமூகத்தில் பெண்களை தனியே முன்பெல்லாம் அனுப்ப மாட்டார்கள், கடும் கட்டுப்பாடுகள் உண்டு அந்த சமயத்தில் முதன் முதலாக பள்ளியில் என் சகோதரிகளை ஹாஸ்டலில் தங்க வைத்தார் அப்போது தான் பொறுப்புகள் கூடும் என்று மற்றும் முதன் முதலாக சென்னை வந்து அறை எடுத்து தங்கி படித்து வேலை தேடியது.. பசங்களில் நான் முதல், ஹாஸ்டலில் பெண்களை தங்கவே அனுமதிக்க யோசிக்கும் நேரத்தில் என் அக்காவை லேப் படிக்க வைத்து லேப் டெக்னீசியனாக அரசு மருத்துவமனையில் வேலைக்கு சேர்த்த போது என் அப்பாவிற்கு பல உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்தார்கள். இந்த பிரகாசத்திற்கு(என் அப்பா) ஏன் தான் புத்தி இப்படி போகிறதோ என்று!
எங்கள் கிராமத்தில் இருந்து நகரத்திற்கு பஸ் ல் போவதையே இழுக்காக நினைப்பவர்கள் மத்தியில் (காரில் மட்டுமே செல்வார்கள்) இதை போல நடந்தால் ஜீரணிக்க சிரமமாகவே இருந்து இருக்கும்.
என் அக்காவிற்கு திருமணம் ஆகி பல வருடங்கள் ஆகியும் இன்றும் அவர்கள் நிலை சிறப்பாக இருப்பதற்கு ஒரு காரணம் மற்றும் ஒரு தன்னம்பிக்கையை கொடுத்துக்கொண்டு இருப்பதற்கு காரணம் இந்த வேலையே. மற்றவர்கள் கூறுகிறார்கள் என்று அல்லது அடுத்தவர்கள் பரிகாசம் செய்வார்கள் என்று இல்லாமல் அனைத்து விசயத்திலும் முன்னோடியாகவே என் அப்பா சிந்திப்பவர். அன்று அவர் எடுத்த பல துணிச்சலான முடிவுகளே என்று எங்களின் ஒரு நல்ல நிலைக்கு காரணம், அன்று கேள்வி கேட்டவர்கள் இன்று அமைதியாக இருக்கிறார்கள்.
பொதுவாக அப்பாவின் அன்பு பெரும்பாலானவர்களுக்கு புரிவதில்லை அல்லது பிள்ளைகளுக்கு புரியும் படி தன் அன்பை அப்பாக்களுக்கு வெளிப்படுத்த தெரிவதில்லை, கண்டிப்பு என்ற ஒரு வார்த்தையிலே அனைவரும் அப்பாவை அடக்கி விடுவதால் அவரின் பாசம் அன்பு அக்கறை பலருக்கு கடைசி வரை தெரியாமலே போய் விடுகிறது. அப்படிப்பட்ட அப்பாவின் மனதை புரிந்து கொள்ளுங்கள், அவரும் நம் அன்னையை போல அன்பு கொண்டவர் தான் என்பதை உணருங்கள்.
அனைவருக்கும் தந்தை என்பவர் சரியாக அமைந்து விடுவதில்லை, எதிலும் விதி விலக்குகள் உண்டு என்பதை போல இதிலும் உண்டு. தங்கள் பிள்ளைகளை நல்ல அறிவுரை கூறி வாழ்க்கையின் அர்த்தங்களை விளக்கி வளர்த்த அனைத்து அன்பு தந்தைகளுக்கும் இந்த பதிவு தந்தையர் தின பதிவாக சமர்ப்பணம்.
அனைத்து திரைப்படங்களும் அம்மாவின் அன்பை மட்டுமே காட்டி வரும் நேரத்திலே, அப்பாவிற்கும் அன்பு, பாசம் பொறுப்பு அனைத்தும் உண்டு என்று அதை ஒரு “தவமாய் தவமிருந்து” என்ற திரைக்காவியமாக எடுத்த இயக்குனர் சேரன் அவர்களுக்கும் மற்றும் தாயை போல தந்தையை நேசிக்கும் அனைவருக்கும் இந்த பாடல் சமர்ப்பணம். அப்பாவை நிஜத்தில் பலர் புறக்கணிக்கிறார்கள் என்பதாலோ என்னவோ அந்த கதாப்பாத்திரத்தில் வாழ்ந்த ராஜ்கிரணுக்கு தேசிய விருது கொடுக்கவும் யோசித்து கடைசியில் கொடுக்காமலே போனது எனக்கு இன்று வரை வருத்தம்.
No related posts.


{ 29 comments… read them below or add one }
கிரி… காலைல வந்ததுமே கண் கலங்க வெச்சுட்டீங்க கிரி..!
தோழுக்கு மேல் வளர்ந்து விட்டால் தோழன் என்று என்னை தனக்கு சரிசமமாக நினைத்து இன்று வரை செயல்பட்டு வரும் என் அப்பாவையும், அவர் என்னை கண்டிப்புடன் வளர்த்ததையும், இன்று கணிவுடன் பேசுவதையும் நினைத்து பெருமைப்பட வைத்து விட்டீர்கள். மிக்க நன்றி! அப்பா பாசத்தை அருமையாக அனுபவித்து எழுதியிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்…!
சிற்பிகள் அழகான சிலையை செதுக்குவதுபோல தாய் – தந்தை ஆகிய அந்த தெய்வங்கள்தான் நம்மை செதுக்கி இந்த அளவுக்கு மிளிரச் செய்திருக்கிறது என்பதை என்றைன்றும் நினைத்திருந்தால்தான் நாம் பெறும் பெயரும், புகழும் நம்மிடம் நிலைத்திருக்கும்…!
நெகிழ்வான பதிவு.அருமையாக சொல்லியிருக்கீங்க.
தலைப்பும் சரி, பதிவும் சரி உணர்த்துகின்ற விஷயங்கள் உன்னதமாக உள்ளன. வாழ்த்துக்கள் கிரி!
அப்பாவைப்
பற்றி
ஆழமாக
எழுதியுள்ளிர்கள்!!!
தமிழ்த்துளி தேவா..
உங்கள் தந்தையாருக்கு எனது பணிவான வணக்கங்களும்,பாராட்டுக்களும்,கிரி.
நீங்களும் நல்ல தந்தையாக இருக்க உங்கள் தந்தையார் முன்னோடியாக இருப்பார் எனபது கூடுதல பயன்!
good
மிகவும் நல்ல பதிவு.
பொதுவாக எல்லோருக்கும் அப்பா கண்டிப்பாக தான் இருப்பார்கள்.
ஆனால் நீங்கள் சொன்னது போல தோளுக்கு மேல் வளர்ந்தால் தோழன் ஆகி விடுவார்கள்.
எமது வீட்டிலும் நாம் சிறுவர்களாக இருந்த போது அப்பா மிகவும் கண்டிப்பாக தான் இருப்பார்.
அதுவும் அவர் ஒரு கணித ஆசிரியர். இருக்கிற முழுக்கணக்கையும் கொண்டு வந்து
செய்யும் படி சொல்லும் போது எனக்கு எரிச்சலாக இருக்கும்.
நானும் தம்பியும் அப்பாவின் கணக்கிலிருந்து தப்புவதற்கு நிறைய plan எல்லாம் போடுவோம்.
படிப்பு விடயத்தில் மட்டும் இரக்கம் காட்டவே மாட்டார்.
அதுவும் கணித பாடத்தில் 95 புள்ளி எடுத்தால் கூட அவர் திருப்தி அடையமாட்டார்.
மிச்சம் 5 புள்ளி எங்கே என்று தான் கேட்பார்.
இன்று நாம் படித்து நல்ல நிலையில் இருக்கிறோம் என்றால் அதற்கு அப்பா தான் காரணம்.
ஆனாலும் எமது சுதந்திரத்தில் அவர் ஒருபோதும் குறுக்கிட்டது இல்லை.
நான் கேட்கும் கதைப்புத்தகம், படம் என்று எல்லாமே வாங்கித்தருவார்.
தேவையெனில் அறிவுரை மட்டும் சொல்லுவார்.
மிக நெகிழ்வான பதிவு கிரி. அனைவருக்கும் தந்தையர்தின வாழ்த்துக்கள்.
Giri
A fantastic write-up, i read in the recent times…….
Do come with more such write-ups…
I wish you all the very best….
கிரி….
வயதுகள் ஏற ஏற
வாழ்க்கை மாற மாற
வயோதிகத் தந்தையின் அருமை புரியும்..
உங்களுக்கு
வாலிபத்திலேயே தெரிவதால்…
உங்கள் தந்தைக்கு –
உங்களை பெத்ததே சந்தோசம்
அது போல உங்களுக்கும்
அத் தந்தையைப் பெற்றதே சந்தோசம்.
நெகிழச் செய்யும் பதிவு……
அன்புடன்.
ஈ ரா
// பொதுவாக அப்பாவின் அன்பு பெரும்பாலானவர்களுக்கு புரிவதில்லை அல்லது பிள்ளைகளுக்கு புரியும் படி தன் அன்பை அப்பாக்களுக்கு வெளிப்படுத்த தெரிவதில்லை //
இது உண்மை தான். நல்லமுறையில் வளர்த்துகிறேன் என்று எப்போதும் கண்டிப்புடன் இருப்பது தான் அதற்க்கு காரணம் என்று நான் நினைக்கிறேன்.
அண்ணே, நான் பதிவுலகத்துக்கு புதுசு …
உங்க பதிவு அழகு, தமிழர்ஸில் வோட்டும் போட்டாச்சு
அப்படியே நம்ம பதிவுக்கும் வந்து பார்த்து விட்டு !!!
ஓட்ட மறக்கமா தமிழர்ஸில் குத்திட்டு போங்க உங்களுக்கு புண்ணியமா போகும்
மிகவும் கஷ்ட்டபட்ட குடும்பத்தில் இருந்து வந்த எனது தந்தை – அவருடைய குழந்தைகள் அனைவருக்கும் கல்வி எனும் செல்வத்தை கொடுத்தார்.
ஏழ்மையிலும் நேர்மையாக வாழ்ந்து எங்களை நல்ல நிலைக்கு கொண்டு வந்துவிட்டார்
எனது முதல் ஹீரோ அவர் தான்.
நல்ல பதிவு கிரி
தங்களுக்கும் தந்தையர் தின நல் வாழ்த்துகள்
தந்தையர் தின நல் வாழ்த்துகள் கிரி
'தாயிற்சிறந்த கோயிலும் இல்லை
தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை
ஆயிரம் உறவில் பெருமைகள் இல்லை
அன்னை தந்தையே அன்பின் எல்லை
தன்னலம் அற்றது தாயின் நெஞ்சம்
தாய்மை நிறைந்தது கடவுளின் நெஞ்சம்
மன்னுயிர் காப்பவர் மாந்தருள் தெய்வம்
அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்
பொறுமையில் சிறந்த பூமியும் உண்டு
பூமியை மிஞ்சும் தாய்மனம் உண்டு
கோயிலில் ஒன்று !.குடும்பத்தில் ஒன்று
கடவுளும் தாயும் கருணையும் ஒன்று!….
Kalakkalll thalaivaaaa
superbbbb
Thanks,
Arun
நண்பரே…
உங்களுக்கு ஞாபகம் இருக்குமோ என்னமோ தெரியல..
உங்களுடைய ரஜினி பதிவ படிச்சிட்டு நான் பதிலிட்டப்போ சொல்லி இருந்தேன்
அவரவருடய அப்பா தான் சூப்பர் ஸ்டார்னு….
நல்ல பதிவு….
ரொம்ப அருமையான பதிவு கிரி !!!
கிரி….. மிக உன்னதமான பதிவு வாழ்த்துக்கள்…..
கிரி…. மிகவும் உன்னதமான பதிவு. வாழ்த்துக்கள்.
நல்ல பதிவு, நான் கூட என் அப்பாவைப்பற்றி ஒரு பதிவு போடலாம் என்ற எண்ணம் உள்ளது.
தந்தையினர் தின வாழ்த்துக்கள்!
(நாளைக்கு தானே)
என் அப்பாதான் என் ஹீரோ ….
நீங்கள் என்னமாய் கருத்தை தெரிவித்து இருக்கீங்க.
வாழ்த்துகள் …!
நல்ல பதிவு ……
இந்தகாலத்து மகளுக்கு புயனுமே!!!!!!!!!!!!!!!!
நல்ல பதிவு கிரி!
அப்பாவை நான் பார்க்கும் போது இருந்த மதிப்பை விட இப்போது மிக உயரத்தில்….
இன்னுமொரு முன்மாதிரிப் பதிவு கிரி!!!
அப்பாவை பற்றிய நல்லதொரு பகிர்வு,..
உங்களுக்கும் தந்தையர் தின வாழ்த்துகள்
டியர்
ரொம்ப சூப்பர் அம்மா பிள்ளையை பெற்று இய்ந்தம் வகுப்பு வரை பொறுப்புடன்
பாசத்துடன் இருப்பர்கள் அப்பா அந்த பிள்ளை பெற்றதில் இருந்து படிப்பு வருங்களm கல்யாணம் என்று அவர் படும் பாடு ஆண்டவனுக்குத்தான் தெரியும்
உங்க ரெண்டுபேர் கிட்டயும் நெருங்கி பழகற வாய்ப்பு கெடைச்சது ரொம்ப சந்தோசம் …சூப்பர் கிரி… (தாமதத்திற்கு மன்னிக்கவும்)
நல்ல பதிவு