Friday, November 28, 2008

எச்சுச்மி! டோக்கன் போட்டுட்டேன் கேம் ஸ்டார்ட் ஆக மாட்டேங்குது

நான் சென்னையில் படித்து விட்டு வேலை தேடி கொண்டு இருந்த போது பல இடங்கள் சுற்றியும் பல நிறுவனங்கள் சென்றும் வேலை கிடைக்கவில்லை. அப்போது நான் தங்கி இருந்த அறையில் இருந்த என் சீனியர் நண்பர் தன் நண்பனிடம் கூறி வேலைக்கு ஏற்பாடு செய்தார். எங்கே வேலை என்றால் கிஷ்கிந்தா தீம் பார்க் ல் தான்..அங்கே நமக்கென்ன வேலை இருக்கிறது என்று குழம்பிய போது தற்போது அங்கே கம்ப்யூட்டர் கேம்ஸ் டிவிசனுக்கு கம்ப்யூட்டர் தந்து இருக்கோம் அங்கே நீ வருகிறவர்களுக்கு கம்ப்யூட்டர் கேம் சொல்லி தரவேண்டும் என்றார்கள் ..இது என்னடா நமக்கு வந்த சோதனை, படிக்கும் போது தான் சாலிடேர் விளையாடிட்டு இருந்தோம் வேலைக்கு வந்தாலும் இதை போலவே வருதேன்னு நொந்து... சரி! எந்த வேலையும் கிடைக்கல இதையாவது பார்ப்போம் என்று சேர்ந்து கொண்டேன் (எனென்றால் வேலை இல்லாம இருப்பதை விட கொடுமையான விஷயம் இல்லை)

பலவிதமான நபர்களும் வருவார்கள், கோபமானவர்கள், ஜாலியான ஆட்கள், அமைதியான ஆட்கள் என்று கலவையாக இருக்கும், இவர்கள் கூட நம்மை டென்ஷன் செய்யும் ஆட்களும் வருவதுண்டு.  ஒரு சிலர் நாம் என்ன கூறினாலும் காதில் வாங்கி கொள்ளாமல் அவர்கள் இஷ்டத்துக்கு கீ போர்டை போட்டு தட்டு தட்டுன்னு தட்டி அதில் உள்ள கீ எல்லாம் வெளியே தெறிச்சு விழற அளவிற்க்கு (சில சமயம் கீ உடைந்தே போய்டும்) போட்டு நொக்கி எடுப்பாங்க. நாம் கேமை எப்படி விளையாடுவது என்று உதவி செய்ய வந்தாலும் நாம் சொல்வதை காதிலே வாங்கிக்க மாட்டங்க... கேமே முடிந்து போய் இருக்கும்! அதை கூட உணராமல் சீரியஸ் ஆக விளையாடி கொண்டு இருப்பார்கள்..சரி இவங்களுக்கு என்னத்தை விளங்க வைக்கிறதுன்னு நானும் எதுவும் சொல்ல மாட்டேன்.ஒருத்தர் விளையாடுவார் பின்னாடி 10 பேர் நின்னுட்டு இருப்பாங்க.. பின்னாடி நின்னுட்டு சத்தம் போட்டு ஒரே ரணகளம் பண்ணிட்டு இருப்பாங்க.

ஒருமுறை ஒருத்தர் நம்ப கவுண்டமணி ஜென்டில்மேன் ல டூ ஆர் டை னு ஒரு மெஷினை போட்டு ஆட்டு ஆட்டுன்னு ஆட்டிட்டு இருப்பாரே, அது மாதிரி ஒருத்தர் கம்ப்யூட்டர் ஐ போட்டு உலுக்கு உலுக்கு னு உலுக்கிட்டு இருக்காரு. நான் பீதி ஆகி (ஏதாச்சும் ஆனா யார் முதலாளிக்கு பதில் கூறுவது) ஐயையோ! சார்! என்ன பண்ணிட்டு இருக்கீங்க!!!

எச்சுச்மி! டோக்கன் போட்டுட்டேன் கேம் ஸ்டார்ட் ஆக மாட்டேங்குது...

நான் ஒரு ஆள் தான் அங்கே!

சார்! என்கிட்டே நீங்க டோக்கன் எதுவும் தரலையே!

நீ யாரு கிட்டயோ பேசிட்டு இருந்த அதுனால நானே டோக்கனை போட்டுட்டேன்

நான் குழம்பி விட்டேன்!!! ..எங்கே போட்டீங்க?.

எங்க போடுவாங்க! கம்ப்யூட்டர் ல தான்..(நறநற)

சார்! அங்கே எல்லாம் போட கூடாது... டோக்கன் (ரசீது போல இருக்கும்) என்கிட்டே தான் தரணும்

ஏன்யா! இம்சை பண்ணுறே (யாரு... நாங்க) சரி இந்தா! இதை வைத்துக்கோன்னு ஒரு ருபாய் சைஸ் ல வீடியோ கேம் விளையாட போட கொடுப்பாங்களே அதை கொடுத்தாரு.

ஐய்யயோ சார்! இது வீடியோ கேம் க்கு சார்! கம்ப்யூட்டர் கேம் க்கு ரசீது தான் ..சரி! அந்த டோக்கனை எங்கே போட்டீங்க..

இதோ! இங்க தான்... அதுக்கு தானே இந்த ஓட்டைன்னு பிளாப்பி டிஸ்க் போடுற இடத்தை காட்டுனாரு..அவ்வ்வ்வ்வ்வ்

அவருக்கு விளக்கி வேற டோக்கன் கொடுத்து விளையாடி!! அனுப்பி வைக்கிறதுக்குள்ள போதும் போதும்னு ஆகிடுச்சு..அப்புறமா சர்வீஸ் பண்ணுறவங்களை கூப்பிட்டு உள்ள சிக்கிட்டு இருந்த டோக்கனை வெளியே எடுத்தோம்..இப்பவும் எங்காயாவது வீடியோ கேம்ஸ் விளையாட சென்றால் எனக்கு இந்த காய்ன் டோக்கனை பார்த்தால் இவர் நினைவு தான் வரும் :-)))))

Buzz It

Wednesday, November 26, 2008

வேடிக்கை பார்க்கும் பொதுஜனம் சுயநலவாதியா!

பொதுமக்கள் மீது வழக்கமாக வைக்கப்படும் குற்றசாட்டு..எது நடந்தாலும் வேடிக்கை, எந்த ஒரு உதவிக்கும் வர மாட்டார்கள் எவன் எக்கேடோ கெட்டு போனால் நமக்கென்ன என்று இருக்கும் சுயநலவாதிகள் என்று. 

மற்ற நாட்டினருக்கு எப்படியோ நம் நாட்டிற்கு இந்த வசனம் பொருந்துமா என்று எனக்கு தெரியவில்லை. பாதிக்க பட்ட ஒருவனுக்கு உதவி செய்யும் ஒருவனின் நிலை நம்ம ஊரில் என்ன கதி ஆகும் என்று யாருக்கும் சொல்லி தெரியவேண்டியதில்லை காவல் நிலையம், நீதிமன்றம், வழக்கு, கையெழுத்து, சாட்சி, மிரட்டல் என்று அலைகழித்து அவனை இனி உதவி செய்கிறீர்களா என்று யாராவது கேட்டால் அவன் தலை தெறிக்க ஓடுமளவுக்கு செய்து விடுவார்கள். (சுயநலத்தோடு ஒரு சிலர் அல்லது பலர் இருக்கிறார்கள் அவர்கள் எங்கும் இருப்பார்கள்)

ஒரு நடுத்த வசதி உள்ள ஒருவனால் அவன் அன்றாட தேவைகளுக்காக அலைய முடியுமா இல்லை உதவி செய்ததற்காக இதை போல தினமும் அங்கே இங்கே அலைந்து கொண்டு இருக்க முடியுமா? எடுத்துக்காட்டாக ஒருவனை யாரோ கத்தியால் குத்தி விட்டார்கள்.. சாக கிடக்கிறான், மனிதாபிமானமுள்ள யாரும் காப்பாற்ற தான் முயல்வார்கள் அவ்வாறு காப்பாற்ற எடுத்து செல்லும் வழியில் அவன் இறந்து விடுகிறான் என்று வைத்து கொள்வோம். காவல் துறை, கொண்டு வந்தவனை சார்! நீங்க இவரை கொண்டு வந்ததற்கு நன்றி நீங்க வீட்டிற்கு போகலாம் என்று கூறி விட்டு விடுவார்களா? இந்த கொலைக்கும் உனக்கும் என்ன சம்பந்தம் என்று மிரட்ட மாட்டார்களா? இல்லை என்றால் யோவ்! உன்னை யாருயா தூக்கிட்டு வர சொன்னது இதுக்கு நீ தான் சாட்சி! நாளைக்கு காலையில நீதிமன்றம் வந்துடு னு ஒரு போடு போடுவாங்க..அவனை அங்கே இங்கே அலைய விட்டு அவன் நொந்து நூடுல்ஸ் ஆகிற வரை சக்கையா பிழிந்து எடுத்து விடுவார்கள், இடையே கொலை செய்தவர்கள் பக்கம் இருந்து மிரட்டல். இதை பார்க்கும் மற்றவர்கள் மற்றும் உதவி செய்தவர் மறுபடியும் இதை போல ஏதாவது பிரச்சனை வந்தால் உதவி செய்வார் என்று நினைக்கிறீர்களா?

சமீபத்திய சட்ட கல்லூரி பிரச்சனையையே எடுத்து கொள்ளுங்கள் யாராவது ஒருத்தர் துணிந்து காப்பாற்ற சென்று இருந்தால் அவரின் நிலைமை என்னவாகி இருக்கும்? காவலர்கள் செல்லாமல் இருந்ததற்கு ஒரு காரணமாக கூறப்படுவது இதனால் பின் வரும் பிரச்சனைகள் (மாணவர்கள் வக்கீல்கள் போராட்டம்). கையில் காவல் துறை என்ற அதிகாரம் இருந்தும் இது போல பிரச்சனைகளால் மற்றும் அரசியல் காரணங்களால் உள்ளே சென்று அவர்களை அடக்க காவல்துறையே யோசிக்கும் போது அல்லது பயப்படும் போது எந்த ஒரு பின்புலமும் அதிகாரமும் இல்லாத சாதாரண பொதுஜனம் என்ன செய்து விட முடியும். அப்படியே உதவி செய்தாலும் நாளைக்கு யார் பாதுகாப்பு? டேய்! மவனே உனக்கு இருக்குடி எந்த ஏரியா டா நீ? அப்புறமா உன்னை வச்சுகிறேன்னு மிரட்டுவானுக ..இவர்களுக்கு பயந்து எத்தனை நாள் ஒருத்தன் பயந்து கொண்டே இருக்க முடியும்? இதில் அரசியல் சம்பந்தப்பட்டு இருந்தால் வேற வினையே வேண்டாம் அவன் கதி அதோ கதி தான்.

ஏதாவது அரசியல் பின்புலம், அதிகாரம், மக்கள் செல்வாக்கு, பண பலம், ஏதாவது அமைப்பில் உறுப்பினர் என்று ஏதாவது இருந்தால் மட்டுமே ஒரு பொது ஜனம் தவறை தட்டி கேட்க முடியும் அல்லது அதை எதிர்த்து போராட முடியும். இவ்வளோ பெரிய ஊரில் ஒரு ட்ராபிக் ராமசாமியை மட்டும் எடுத்துக்காட்டாக கூறினால் போதுமா? அவரின் சிரமங்கள் எத்தனை பேர் அறிவர்

திரைப்படங்களில் வேண்டுமானால் வசனம் பேச முடியும், அனைவரையும் கேள்வி கேட்க முடியும் அதே நிஜவாழ்க்கையில் நடைமுறையில் சாத்தியம் இல்லை அல்லது மிக குறைவு

இது யாருடைய குற்றம்? வேடிக்கை பார்ப்பவன் குற்றமா? இல்லை இப்படி கடுமையான அணுகுமுறை மற்றும் எளிமை இல்லாத வழிமுறைகள் வைத்து இருக்கும் சட்டத்தின் குற்றமா? உதவி செய்பவர்களுக்கு சிரமம் இல்லாத நடவடிக்கை மேற்கொண்டால் மற்றும் உண்மையான பாதுகாப்பு கொடுத்தால் மட்டுமே எந்த ஒரு நபரும் துணிந்து உதவி செய்ய வருவார், இவை நம் ஊரில் நடக்க சாத்தியமா!

அப்ப எந்த ஒரு தவறையும் தட்டி கேட்காமல் சுரணை இல்லாமல் இருப்பதா! என்றால் சாதாரண பொது ஜனத்தால் (குறிப்பாக நடுத்தர மக்கள்) தன் எல்லை எது வரை உள்ளதோ அல்லது அதனால் பெரிய பாதிப்பு இல்லை என்று உணர்ந்தால் மட்டுமே ஒருவர் உதவி செய்ய முன் வருவார், அதுவரை ஒரு சிலர் கூறுவது போல சுயநலவாதியாக மனதினுள் உதவ ஆசை இருந்தாலும் நடைமுறையில் இவ்வாறு தான் இருக்க முடியும் அல்லது நமது சட்டங்கள், சமூகம், அரசியல் அமைப்பு இருக்க வைக்கிறது. இவைகளில் மாற்றம் வரும் போது மட்டுமே எந்த ஒரு சாதாரண மனிதனும் எங்கேயும் வேடிக்கை பார்க்காமல் தன் பொறுப்பை உணர்ந்து செயல்படமுடியும். எளியோரை வலியோர் வருத்துவது இருக்கும் வரை இதை போல சுயநலமும் தவிர்க்க முடியாததே.

Buzz It

Monday, November 24, 2008

வாரணம் (சூர்யா) ஆயிரம் - திரைவிமர்சனம்


பலரும் வாரணம் ஆயிரம் மொக்கை படம் குப்பை படம் என்று வர்ணித்து எழுதி இருந்ததால் எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் சூர்யா, கவுதம் மேனன் படம் என்பதற்காக சென்று பார்த்தேன், அனைவரும் கூறும்படி அத்தனை மோசமாக இல்லை என்பது என் தனிப்பட்ட கருத்து. இனி என் பார்வையில் வாரணம் ஆயிரம்.

ஒரு தந்தை மகனுக்குள்ளே இருக்கும் பாசத்தை வழிகாட்டுதலை ஒரு அன்பான குடும்பத்தின் நிலையை படம் பிடித்து காட்டியுள்ளார் கவுதம் மேனன், அதை தன் நடிப்பால் அதற்க்கு வலு சேர்த்தது சூர்யா என்றால் மிகையாகாது. உண்மையில் இந்த படத்தின் வாரணம், சூர்யா தான். வாவ்! சூர்யா அசத்திட்டீங்க

இதில் சூர்யா தந்தை மகன் இரு கதாபாத்திரத்திலும் நடித்து உள்ளார், படம் தந்தை சூர்யாவில் ஆரம்பித்து மகன் சூர்யாவின் பிளாஷ் பேக்காக விரிவடைகிறது. தந்தை சூர்யா கல்லூரியில் படிக்கும் போது சிம்ரன் அழகில் மயங்கி காதலை தெரிவித்து திருமணம் செய்து கொள்கிறார், காதலித்த போது எப்படி அன்புடன் இருந்தாரோ (பலர் காதல், திருமணமாகி 6 மாதத்திலேயே முடிந்து விடுகிறது, அல்லது கவர்ச்சி குறைந்து விடுகிறது) தனது முடிவு வரை இருக்கிறார் சிம்ரனும் அப்படியே. மகன் சூர்யா சிறிய வயதில் இருந்தே தன் அப்பாவின் மீது அன்பும் மரியாதையும் பாசமும் வைத்து இருப்பவர், அவரின் ஒவ்வொரு நடவடிக்கையும் பார்த்து அவரை ஒரு ஹீரோவாக ரோல் மாடலாகவே கருதுகிறார், அவர் அவ்வாறு கருதுவதற்கு முற்றிலும் தகுதியானவராகவே அப்பா சூர்யா உள்ளார்.

தன் நிழலில் இருக்க கூடாது என்று மகன் சூர்யாவை கல்லூரி ஹாஸ்டலில் சேர்க்கிறார், கல்லூரியில் சூர்யா படிப்பை விட கல்லூரி வாழ்க்கையை என்ஜாய் சேர்கிறார். கல்லூரி முடிந்து வரும் போது ரயிலில் சமீரா ரெட்டியை சந்தித்து பார்த்தவுடன் பிடித்து காதலை கூறுகிறார் (நம்ப முடியவில்லை), இதற்கும் தன் தந்தையையே மாடலாக கருதுகிறார். ஆனால் சமீரா பார்த்தவுடன் எனக்கு காதல் வரவில்லை, பழகினால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும் என்று கூற, திரும்ப அவரை அவரது வீட்டில் சந்திக்கிறார், சமீரா தான் படிக்க அமெரிக்கா செல்வதாக கூற, சூர்யா அங்கே சந்திக்கிறேன் என்று கூற அதை விளையாட்டாக எடுத்துக்கொண்டு அமெரிக்கா சென்று விடுகிறார். சூர்யா தான் தந்தையின் கடனை அடைக்க முயன்று ஒரு பொறுப்பான பையனாக நடந்து கொள்கிறார்.

பின் தன் தந்தையின் அனுமதியோடு சமீராவை சந்திக்க அமெரிக்கா செல்கிறார் (நம்ப முடியவில்லை என்றாலும் ரசிக்கும்படியே உள்ளது) அங்கே சமீராவை சந்தித்து அவரை காதலிக்கும் படி தன் நடவடிக்கைகளால் செய்து விடுகிறார், ஆனால் ஒரு குண்டு வெடிப்பில் சமீரா இறந்து விட விரக்தி அடைந்த சூர்யா போதை பழக்கத்திற்கு அடிமையாகி விடுகிறார், அதையும் தந்தை சூர்யாவும் அம்மா சிம்ரனும் தன் அன்பால் மாற்றுகிறார்கள். அந்த சமயத்தில் பக்கத்து வீட்டு (குத்து) ரம்யா இவர் மீது காதல் கொள்ள பின் கால மாற்றத்தில் அவரை திருமணம் செய்து கொள்கிறார், இந்நிலையில் தந்தை சூர்யா அதிகமாக புகை பிடித்ததால் கேன்சர் வந்து இறந்து விடுகிறார். பின் சூர்யா தன் குடும்பத்துடன் மீதி வாழ்க்கையை தொடர்வதாக முடிக்கப்பட்டு இருக்கிறது

கவுதம் மேனின் காக்க காக்க, வேட்டையாடு விளையாடு போன்ற வேகமான திரைக்கதை படங்களை போல எதிர்பார்த்து சென்றால் உங்களுக்கு ஏமாற்றம் தான், படம் மெதுவாக செல்கிறது குறிப்பாக இரண்டாம் பகுதி. இந்த திரைகதையில் இப்படி மட்டுமே படத்தை கொண்டு செல்ல முடியும், எனென்றால் கதை அப்படி.

காதாபாத்திரத்தின் வயதிற்கே உரிய உடலமைப்புடன் சூர்யா மிக மெனக்கெட்டு இருக்கிறார், குறிப்பாக ஒரு காட்சியில் பள்ளி சீருடையுடன் தன் அப்பாவிடம் பேசும் போது ஒரு நிமிடம் ஏமாந்து விட்டேன், சின்ன பையனை போலவே இருப்பார். உடன் படிக்கும் மாணவியுடன் இவர் கடலை போட அந்த மாணவியின் ஆள், கடுப்பில் சூர்யாவை கொஞ்சம் பதம் பார்த்து விட தன்னை விட பலசாலி என்பதால் எதுவும் செய்ய முடியாமல் வந்து விடுகிறார், அப்பா பார்த்து என்ன என்று கேட்கும் போது இவர் நடந்ததை கூறும் போது ஆம்ஸ் ஏத்தி வைத்து என்ன பண்ணுறே! அவன் கூட சண்டை போடு என்று கூற, வந்த தைரியத்தில் மறுபடியும் அவன் கூட சண்டைக்கு போவது லொள்ளான காட்சி :-) கடைசியில் சிக்ஸ் பேக் உடலுடன் அனைவரையும் மிரட்டுகிறார், பொண்ணுக தூக்கத்தை கெடுத்து விடுவார் போல ;-)

சமீராவை முதலில் ரயில் சந்திக்கும் போது சூர்யா செய்யும் ரொமான்டிக் சேட்டைகள் ரசிக்கும் படி இருக்கும் சமீராவும். சமீரா, பிரியங்கா சோப்ராவை நினைவு படுத்தும் முகம். சூர்யா அமெரிக்க சென்று சமீராவை சந்திக்கும் போது அவர் சூர்யாவின் வரவை எதிர்ப்பார்க்காமல் அதிர்ச்சியாகி பின் அவருடன் பழகுகிறார். சூர்யாவின் குறும்புத்தானமான செய்கைகள் நாகரிகமான நடவடிக்கைகள் அவரை கவர்ந்து விட அவரை காதலிக்க ஆரம்பிக்கிறார். இவர்கள் காதல் உண்மையில் மிக ரொமாண்ட்டிக்காக உள்ளது, நாகரிகமாகவும் காட்சிகள் எடுக்கப்பட்டுள்ளன. பின் குண்டு வெடிப்பில் சமீரா இறந்து விட அந்த அதிர்ச்சியில் தன் அப்பாவை தொலைபேசியில் அழைத்து பேசும் போது ஏமாற்றத்தை தாங்கி கொள்ளாமல் அவர் அழும் காட்சி அருமையாக எடுக்கப்பட்டுள்ளது. எனக்கு காதல் காட்சிகள் இப்படி சட்டென்று முடிந்து விட்டதே என்று வருத்தம் தான் அந்த அளவிற்கு நன்றாக இருந்தது. சமீரா அலட்டி கொள்ளாமல் இயல்பாக அழகாக நடித்துள்ளார், உண்மையாகவே

ரம்யா, சமீரா அளவிற்கு மனதில் பதியவில்லை (ஹி ஹி ஆனால் பார்க்க நன்றாக உள்ளார்). சூர்யாவுடன் இருக்கும் காட்சிகளில் அவ்வளவாக நடிப்பை காட்டவில்லை,டப்பிங் குரலும் சரி இல்லை. சூர்யாவை பார்க்கும் போது சுத்தமாக காதலே தெரியவில்லை ஒரு சில காட்சிகள் தவிர்த்து. சமீரா இதில் ரம்யாவை ஓவர் டேக் செய்து விட்டார். சூர்யா அந்த சமயத்தில் மிலிட்டரி அதிகாரியாக இருப்பார் எனவே எப்போதும் விறைப்பாகவே இருப்பார் ஒருவேளை அதுவும் ஒரு காரணமோ என்னவோ

சிம்ரன் .. ஒ! சிம்ரன் உங்களுக்கு வயதாகி விட்டது..தந்தை சூர்யாவுக்கு ஜோடி சிம்ரன், கல்லூரி காலத்தில் ரொமான்ஸ் செய்யும் போது சூர்யாவிற்கு அக்கா போல உள்ளார், பின் வயதான தோற்றம் சூர்யாவிற்கு வரும் போது தான் பொருத்தமாக தெரிகிறார் (நேருக்கு நேர், எங்கெங்கே எங்கெங்கே இன்பம் உள்ளதென்று பாடல் நினைவிற்கு வந்தது மனதை வருத்தியது, ம்ம்ம் காலம் மாறிக்கொண்டு இருக்கிறது). சிம்ரன் முகத்திலும் உடம்பிலும் மெச்சுரிட்டி தெரிகிறது இனி ஹீரோயின்!!! கனவை மூட்டை கட்டி வைத்து விடலாம். கடைசியில் கேன்சரில் தந்தை சூர்யா இறக்கும் போது சிம்ரனின் நடிப்பு கிளாஸ். அழுது ஊரை கூட்டாமல் எக்ஸ்ட்ராவாக நடித்து நம்மை எரிச்சலூட்டாமல் மெச்சூர்டாக நடித்து இருப்பது மனதை தொடுகிறது. கடைசியில் சூர்யா இறந்ததை நினைத்து வழக்கமான படங்களை போல ஒப்பாரி வைக்காமல் வருங்காலத்தை ஒழுங்காக கழிக்க வேண்டும் அதை தான் அப்பாவும் விரும்புவார் என்று தன் மகனுக்கு கூறும் போது அனுபவப்பட்ட அம்மாவாக மிளிர்கிறார். குடும்பத்தை ஈகோ இல்லாமல் வழி நடத்தி ஒரு அன்பான குடும்ப தலைவியாக அனைவர் மனதிலும் உயருகிறார்

அப்பாவாக நடித்து இருக்கும் சூர்யா நடிப்பில் அசத்துகிறார், ஓவர் ஏக்டிங் செய்யாமல் சாதாரணமாக கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு சரியாக செய்துள்ளார். மகனுக்கு அறிவுரை கூறும் போதும் நண்பனாக பேசும் போதும் மகனின் தவறை உணர்ந்து அவரை திருத்தும் போது இப்படி பட்ட அப்பா நமக்கு வேண்டும் என்று பலரையும் எண்ண வைத்து விடுகிறார். படத்தின் இடையிடையே பல நறுக் கிண்டல்களும் செய்து கலகலப்பூட்டுகிறார்.

இந்த படம் B C சென்டர்களுக்கான படமல்ல (A சென்டர்களிலேயே பலருக்கு பிடிக்கவில்லை) வழக்கமான மசாலா படமல்ல, பல இடங்களில் ஆங்கில வசனங்கள். படத்தை சூர்யாவின் பிளாஷ் பேக்காக காட்டுவதை தொடர்ச்சியாக காட்டாமல் ஆயுத எழுத்து, அலைபாயுதே போல கட் செய்து காட்டுவது பலரை எரிச்சலுக்கு உண்டாக்கும், அந்த படங்களை போல அளவாக இருந்தால் தெரிந்து இருக்காது, கொஞ்சம் (இல்லை ரொம்பவே) அதிகம் தான். இரண்டாம் பகுதி மெதுவாக செல்கிறது. சூர்யா காஷ்மீர் செல்லும் காட்சிகள் அவசியமே இல்லாதது, அதே போல தீவிரவாதிகளிடம் இருந்து ஒருவரை காப்பாற்றுவது மற்றும் அஞ்சலை பாடல். தவமாய் தவமிருந்து படத்தை இப்படம் நினைவு படுத்துகிறது. படத்தில் கதை என்று எதுவுமில்லை தந்தை மகனுக்கிடையே நடக்கும் சம்பவங்கள் மற்றும் கிளை சம்பவங்களை படமாக காட்டி உள்ளார்கள்.

அமெரிக்கா காட்சிகள் அட்டகாசம், அதுவும் அடியே கொல்லுதே பாடல் நம்மை கொல்கிறது, அதிலும் ஆண் குரல் சூப்பர். சமீரா தன் காதலை சூர்யாவிடம் சொன்ன பிறகு சூர்யா நம்ப முடியாமல் கொஞ்ச தூரம் நடந்து சென்று அதை ரசித்து அடியே! கொல்லுதே பாடலுக்கு வரும் கிடார் இசையை வெறும் கையில் இமிடேட் செய்வது கலக்கலாக இருக்கும். சூர்யா நடனம் ஆடும் போது உடலை விறைப்பாக வைத்து கொள்ளாமல் ஆடினால் இன்னும் ரசிக்கும் படி இருக்கும். படத்திற்கு பலம் இசையும் கேமராவும், அசத்தலாக இருக்கிறது. பாடல்கள் அனைத்தும் ரசிக்கும் படி உள்ளது. சூர்யா கிடார் ல் விருப்பமாக உள்ளவராக வருவதால் பெரும்பாலான பாடல்களில் கிடார் இசை வருகிறது, நன்றாகவே உள்ளது.

நண்பனை போல பழகும் அப்பாவை கொண்டவர்களுக்கு இந்த படத்தினை உணர முடியும் [அப்படின்னா! படம் பிடிக்காதாவங்களுக்கு அப்பா எதிரியா என்று லொள்ளுக்கு எல்லாம் கேட்கப்படாது ;-) ], என்னால் முடிந்தது. மற்றபடி படம் பிடிக்கவில்லை என்றால் என்ன சொல்வது? ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பார்வை, அனைவருக்கும் ஒரு படம் பிடிக்க வேண்டும் என்பதில்லையே. பிடிக்காதவர்களுக்கு வா"ரணம்" ஆயிரம், பிடித்தவர்களுக்கு "வாரணம் ஆயிரம்" எனக்கு படம் பிடித்தது.

டிஸ்கி: படம் பார்த்து என் மனதில் தோன்றியதை படத்தின் விமர்சனமாக எழுதி இருக்கிறேன். படம் பார்த்து உங்களுக்கு பிடித்தாலும்! பிடிக்கவில்லை!! என்றாலும் அதற்க்கு நான் பொறுப்பல்ல.

Buzz It

Thursday, November 13, 2008

இவர்கள் மாணவர்களா ! மிருகங்களா !!


சட்டக்கல்லூரியில் இரண்டு கோஸ்டி மாணவர்களுக்கிடையே நடைபெற்ற மோதலை சன் டிவி ஒளிபரப்பியது. இதை போல ஒரு கொடுமையான காட்சியை அரசியல்வாதிகள், ரவுடிகள் சண்டையின் போது கூட பார்த்தது இல்லை. மிகை படுத்தி கூறவில்லை, சன் டிவி யில் கூட இளகிய மனதுள்ளவர்கள் பார்க்க வேண்டாம் என்று அறிவுறுத்தினார்கள் என்றால் அதன் வீரியம் எப்படி இருந்து இருக்கும் என்று புரிந்து கொள்ளுங்கள்.

ஒரு கும்பல் இடையே தனியாக ஒரு மாணவர் மாட்டி கொண்டார் அவரை காப்பாற்ற சென்ற மாணவரும் மாட்டி கொண்டார். அவரை அடித்த அடியை பார்த்தவுடன் என் கண்கள் கலங்கி விட்டன. அனைவரும் ஹாக்கி ஸ்டிக், கட்டை கொண்டு அவரை அடித்து துவைத்து எடுத்தார்கள், இதை பல செய்தி நிறுவனங்கள் வீடியோ எடுத்து கொண்டுள்ளன, இத்தனை கொடுமையையும் அங்கே இருந்த காவலர்கள் வேடிக்கை பார்த்து கொண்டு இருந்ததை தான் என்னால் தாங்க முடியவில்லை. ஒருவரை மாட்டை விட மோசமாக போட்டு மிருகத்தனமாக அடித்து கொண்டுள்ளார்கள் இவர்கள் ம**** போகிறது என்று வேடிக்கை பார்த்து கொண்டுள்ளார்கள். குறைந்த பட்சம் தடுக்கவாவது முயற்சி செய்ய கூடாதா.

அந்த மாணவன் என்ன தான் எதிர் கோஷ்டிக்கு பிரச்சனை செய்து இருக்கட்டும் (வசமாக சிக்கியது இவர்கள் இருவர் மட்டுமே நமக்கு தெரிந்து) அதற்க்கு இவர்கள் செய்ததை எவரும் மன்னிக்க மாட்டார்கள். அந்த மாணவன் அடி வலி தாங்காமல் எதிர்க்க திராணியில்லாமல் கீழே விழுந்து விட்டான் (மயக்கமாகி விட்டான் என்று நினைக்கிறேன்) பார்க்காதவர்கள் நம்ப மாட்டீர்கள் (தற்போது வீடியோ அப்டேட் செய்துள்ளேன்) கணக்கு வழக்கு இல்லாமல் காட்டு தனமாக அடித்தார்கள் அவர்கள் அடித்ததில் கட்டை கூட உடைந்து விட்டது. குறைந்த பட்சம் அவருக்கு 30 அடி விழுந்து இருக்கும், ஹாக்கி ஸ்டிக் ல் இத்தனை அடி விழுந்தால் அந்த மாணவனின் நிலையை நினைத்து பாருங்கள். பின்னர் அந்த கும்பலில் இருந்த இளகிய !!! மனம் கொண்ட மாணவன் போதும் என்று கூறி அனைவரையும் அழைத்து சென்றான், இன்னொரு மாணவனை அடித்ததில், சுக்கல் சுக்கலாகி விட்டான் அவனால் எழுந்திருக்கவே முடியவில்லை, கை கால்கள் கண்டிப்பாக முறிந்து இருக்கும், எழுந்தவுடன் நிற்க முடியாமல் வலியால் துடித்து நிலை தடுமாறி திண்டாடி அருகே இருந்த மரத்தின் கிளையை பிடித்து தொங்கி நிற்க முடியாமல் நின்றதை பார்த்த போது கல் மனமும் கலங்கி விடும்.

இத்தனையும் நடந்தது கல்லூரியின் உள்ளே அல்ல, சட்ட கல்லூரியின் வாயிலிலே பொதுமக்கள் மற்றும் ஒன்றுக்கும் பிரயோஜனம் இல்லாத காவலர்கள் முன்பு நடந்தது.

சட்டகல்லூரியில் படிக்கும் !!! இந்த மாணவர்கள் !!! தான் நாளைய சட்டத்தை தாங்கி பிடிப்பவர்களா! தமிழ்நாடு விளங்கிடும். மாணவர்களுக்குள் அடிதடி என்பது சகஜம் தான் இது பல காலமாக நடந்து வருவது, ஆனால் இது அடிதடி இல்லை கொலை வெறி தாக்குதல். இவர்கள் சட்டத்தில் இருந்து தப்பித்தாலும் கடவுள் கண்டிப்பாக மன்னிக்க மாட்டார்.

Buzz It

பஞ்சரான ஆஸ்திரேலிய அணி

கனவிலும் எதிர் பார்க்காத தோல்வியை (2-0) ஆஸ்திரேலிய அணி பெற்றுள்ளது, வார்னே மெக்ராத் இல்லாமல் இருப்பதன் முக்கியத்துவத்தை கண்டிப்பாக உணர்ந்து இருப்பார்கள். முதல் டெஸ்ட் போட்டியில் டிரா க்காக விளையாடியதாக நம்மை குற்றம் சாட்டி தங்கள் திறமையை பெரிதாக நினைத்தவர்களுக்கு அடுத்த மூன்று டெஸ்ட் ம் தர்ம அடி கொடுத்துள்ளது. அதுவும் கடைசி டெஸ்ட் நாக்பூர் ல் அவர்கள் வெற்றி பெற்று தொடரை சமன் செய்து இருக்க வேண்டியது ஆனால் என்ன செய்தும் மூன்றாம் நாள் ஆட்டத்தில் ரன் எடுக்க நம்மவர்கள் விடவில்லை அது மட்டுமில்லாமல் இரண்டாவது இன்னிங்க்ஸ் ல் டோனி ஹர்பஜன் எடுத்த 50 ரன்களும் எமனாகி விட்டது.

பொதுவாக இந்திய ஆட்ட களங்கள் சுழல் பந்து வீச்சிற்கு சாதகமாக அமைக்கப்பட்டு இருக்கும் அதனால் இதை ஒரு குறையாக எப்போதும் எதிர் அணியினர் கூறுவார்கள் இந்த முறை அவ்வாறு இல்லாமல் பேட்டிங் கிற்கு சாதகமாகவே அமைக்கப்பட்டது அப்படி இருந்தும் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற முடியவில்லை. இதில் இருந்தே அவர்கள் திறமையை மதிப்பிட்டு கொள்ளலாம்.

இந்தியா பாகிஸ்தான் எப்படி கடும் எதிரிகளோ அதே போல தான் ஆஸ்திரேலியா இங்கிலாந்து அணிகள். தற்போது ஆஸ்திரேலியா தோல்வி அடைந்ததால் இந்தியாவை விட அவர்கள் தான் அதிக சந்தோசத்தில் உள்ளார்கள். இங்கிலாந்து பத்திரிக்கைகள் ஆஸ்திரேலியாவை கிண்டலடித்து செய்திகள் வெளியிட்டு வருகின்றன. இண்டிபெண்டன்ட் என்ற பத்திரிகை "எந்த சாம்ராஜியமாக இருந்தாலும் ஒரு நாள் வீழ்ந்து தான் ஆக வேண்டும். எந்த ஒரு அணியும் வெல்ல முடியாது என்று இல்லை, இந்திய 2-0 என்று வெற்றி பெற்று இருப்பதன் மூலம் ஆஸ்திரேலியா பஞ்சராக்கப்படுள்ளது, ஆஸ்திரேலியாவிற்கு சரிவு தொடங்கி விட்டது" என்று கூறி உள்ளது.

இந்த டெஸ்ட் தொடர் "தாதா" கங்குலிக்கு நிறைவாகவே முடிந்து இருக்கிறது (கடைசி டெஸ்ட் இரண்டாவது இன்னிங்க்ஸ் ல் டக் அவுட் ஆனது தவிர) கடைசியில் டோனி கங்குலிக்கு கேப்டன் பொறுப்பை கொடுத்து அழகு பார்த்தது மனதிற்கு நமக்கு கொஞ்சம் நிறைவாக இருந்தது. இந்நிலையில் எனக்கு நினைவிற்கு வந்தது ஸ்டீவ் வாக் தான், அவர் தன்னுடைய கடைசி டெஸ்ட் ல் நம்முடன் கஷ்டப்பட்டு விளையாடி டிரா செய்து தொடரை சமன் செய்ய வேண்டிய பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டார். இந்த விசயத்தில் கங்குலி அதிர்ஷ்டகாரரே. இவர் மீது பல குற்றசாட்டுகள் இருந்தாலும் நம்முடைய கிரிக்கெட் சரித்திரத்தில் மறக்க முடியாத நபரே, இவருடைய சிக்ஸர் களும் நாட்வெஸ்ட் சீரீஸ் ல் வெற்றி பெற்ற போது சட்டையை சுழற்றியதையும் எவராலும் மறக்க முடியாது. இவர் இறங்கி வந்து சிக்ஸ் அடிக்கும் ஸ்டைல் க்கு பல ரசிகர்கள் உண்டு என்பதை மறுப்பவர்களும் உண்டோ!

கும்ப்ளே ஏன் மூன்றாவது டெஸ்ட் உடன் விலகினார் என்று தெரியவில்லை. இவர் கேப்டன் பொறுப்பேற்ற இரண்டு டெஸ்ட் ம் டிரா ஆனது இவருக்கு தர்மசங்கடத்தை கொடுத்து இருக்கும், வெற்றியுடன் விடை பெற்று இருந்தால் அவருக்கு நிறைவாக இருந்து இருக்கும், இருந்தாலும் தோல்வியை கொடுக்காத வரை பரவாயில்லை. 

ரிக்கி பாண்டிங் எங்கள் நாட்டில் முரளிதரனை சாதனை செய்ய விட மாட்டோம் என்று கூறி அதே போல அவரை வார்னே சாதனையை முறியடிக்க முடியாமல் செய்தார்கள், ஆனால் இந்திய டெஸ்ட் போட்டி தொடங்கிய போது சச்சினை சாதனை செய்ய விட மாட்டோம் என்று கூறிய போது தலைகனம் தான் தெரிந்தது காரணம் அப்போது 75 ரன்களே எடுக்க வேண்டியது இருந்தது அதற்க்கு, சச்சினை கேவலமாக நினைத்தார்களா அல்லது ஓவர் கான்பிடண்ட் ஆக இருந்தார்களா என்று தெரியவில்லை. எதுவாக இருந்தாலும் இவ்வாறு கூறியதை ஒப்புக்கொள்ள முடியவில்லை. ஓவர் கான்பிடண்ட் உடம்புக்கு ஆகாது என்பதை புரிந்து இருப்பார்கள் என்று நினைக்கிறேன்.

இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி உலகின் தலை சிறந்த அணி !!! என்று கூற ஆரம்பித்து விட்டார்கள் ஒரு சிலர், ஆஸ்திரேலியா தற்போது தோல்வி அடைந்து இருந்தாலும் அதை சாதாரணமாக எடை போட கூடாது, மிக சிறந்த அணி என்பதில் மாற்று கருத்து இல்லை. இதை ஒரு பாடமாக எடுத்துக்கொண்டு மீண்டும் சிறப்பாக விளையாட முயற்சிக்கும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. இந்த வெற்றியின் மூலம் வெற்றி போதை தலைக்கேறாமல் (நம்மவர்கள் தான் தர்ம அடியும் கொடுப்பார்கள் அதே சமயம் தர்ம அடியும் வாங்குபவர்கள் ஆயிற்றே) வரும் போட்டிகளில் சிறப்பாக விளையாட வேண்டும். இந்த வெற்றி ஒரு கூட்டு வெற்றி தான், எந்த ஒரு தனிப்பட்ட ஒருவரின் வெற்றியும் அல்ல.

எத்தனை அணிகள் உலக சாம்பியனான  ஆஸ்திரேலிய அணியை எதிர்த்தாலும் ஆஸ்திரேலிய அணிக்கு சிம்ம சொப்பனமாக இருப்பது இந்திய அணி தான் என்பதை யாரும் மறுப்பதற்கில்லை.

Buzz It

Tuesday, November 11, 2008

குவாண்டம் ஆஃப் சோலஸ் (007) - திரை விமர்சனம்

காசினோ ராயல் என்ற முந்தைய ஜேம்ஸ் பாண்ட் படத்தின் தொடர்ச்சியாக குவாண்டம் ஆஃப் சோலஸ் வெளியாகி உள்ளது. காசினோ ராயல் அதற்க்கு முன்பு வரை வந்த ஜேம்ஸ் பாண்ட் படங்களில் படங்களில் இருந்து வேறு பட்டது எப்படி என்றால், ஜேம்ஸ் பாண்ட் உருவாகிய தொடக்க காலத்திற்கு மறுபடியும் போய் விட்டார்கள், அதாவது முதன் முதலில் ஜேம்ஸ் பாண்ட் என்ற கதாபாத்திரம் எப்படி உருவாகியது என்ற நிலைக்கு, இடையில் எதற்கு அவ்வாறு சென்றார்கள் என்று தெரியவில்லை.காசினோ ராயலில் ஜேம்ஸ் பாண்ட் பணத்தையும் எடுத்து கொண்டு அவருடைய காதலியையும் கொன்று விடுவார்கள் அதற்க்கு இந்த பாகத்தில் எதிரிகளை பாண்ட் பழி வாங்குவதே கதை. 

இவர்கள் பிடித்து வைத்து இருந்த வில்லனும் கொலை செய்யப்பட இதற்கும் மேல் ஒரு பெரிய ஆள் இருக்கிறார் என்று துப்பறிகிறார். அப்போது ஜேம்ஸ் பாண்டால் அமெரிக்க உளவாளி கொல்லப்பட அதனால் கோபம் அடைந்த மேலிடம் ஜேம்ஸ் பாண்டை அதில் இருந்து விலக கூறி அவர் சம்பந்தப்பட்ட விசயங்களை தடை செய்கிறார்கள் (கிரெடிட் கார்ட் உட்பட) ஆனால் இவர் தொடர்ந்து தன்னை அது சம்பந்தப்பட்ட பணிகளில் ஈடுபடுத்தி கொள்ள அவர் மீதுள்ள நம்பிக்கையில் திரும்பவும் அனுமதிக்கிறார்கள். அப்போது தான் கிரீன் ப்ளேனட் என்ற அமைப்பில் உள்ள ஒருவர் (அவர் தான் வில்லன்) சைபீரியா அரசு அதிகாரியுடன் சேர்ந்து 60 சதவீத தண்ணீர் அளவை தன் அமைப்பு மூலமாக கொடுக்க குறுக்கு வழியில் முயல்கிறார். எனென்றால் அந்த இடம் மிகவும் வறட்சியான பகுதி, எனவே தண்ணீர் மிகவும் செலவு அளிக்கும் ஒரு விஷயம். இதை சைபீரிய பெண் உளவாளியுடன் சேர்ந்து அத்திட்டத்தை முறியடிக்கிறார். வேலை முடிந்து மேலிடம் ஜேம்ஸ் பாண்டை நீங்கள் வேலையில் தொடர்ந்து நீடிக்கலாம் என்று கூறியவுடன், அதற்கு பாண்ட் நான் இன்னும் வேலையில் இருந்து விலகவில்லை என்று கூறி விட்டு செல்கிறார். அத்துடன் படம் நிறைவடைகிறது.

இந்த படத்தின் கிளைமாக்ஸ் திடீரென்று வருவது போல உள்ளது, ஒரு பில்ட் அப் இல்லாமல். பாண்ட் மற்றும் சைபீரிய பெண் உளவாளி இருவரும் எளிதாக!!! உள்ளே சென்று விடுகிறார்கள் அதே போல விரைவாக அனைவரையும் அழித்து விடுவார்கள். அட்டகாச கார் சேசிங், காட்டுத்தனமான துரத்தல் என்று படம் அதிரடியாக போகிறது. படமும் கொஞ்சம் குழப்பமாக உள்ளது, புரிவதற்கு கொஞ்சம் சிரமமாக தான் இருந்தது.

ஜேம்ஸ் பாண்ட் படம் என்றாலே வித்யாசமான தொழில் நுட்பங்கள், பாண்ட் பிரபல இசை தான் நினைவிற்கு வரும், இதில் எதுவுமே கிடையாது. பாண்ட் கதாபாத்திரம் தற்போது (காசினோ ராயலில் இருந்து) தான் ஆரம்பிக்கப்பட்டது போல கொண்டு வருவதால் அதற்கான வாய்ப்பு குறைவாக உள்ளது, எதிர்பார்ப்பதில் நியாயம் இல்லை. சரி ஒரு படத்தில் தான் அப்படி இதிலாவது சரி செய்து இருப்பார்கள் என்றால் இதிலும் இல்லை. கொஞ்சம் (நிறையவே) ஏமாற்றம் தான். படம் சாதாரண சண்டை படம் போல உள்ளது எந்த ஒரு பாண்ட் ஸ்பெஷல் ம் இல்லாமல். வழக்கமான பாண்ட் படத்திற்கே உரிய கவர்ச்சி காட்சிகளும் குறைவு.

பொதுவாக பாண்ட் படம் என்றால் தண்ணீரினுள் ஸ்கூட்டர் ஓட்டுவது, பேனா மூலமாக சுடுவது, அதிவேக கார், லேசர் வாட்ச், காலணியில் பாம் போன்ற ஜிம்மிக் வேலைகள் தான் பிரசித்தம். 

பாண்ட் கதாபாத்திரத்தில் நடித்துள்ள கதாநாயகன் டேனியல் கிரெய்க் சும்மா WWF கணக்கா இருக்காரு, வாட்டசாட்டமா, சண்டையில் அடி பின்னி பெடலெடுக்கிறார், கோட் சூட் ல சும்மா சொல்ல கூடாதுங்க அசத்தலா இருக்காரு. இவர் காசினோ ராயல் படத்தில் நடித்த போது பாண்ட் கதாபாத்திரத்திற்கு உண்டான லுக் இல்லை, பியர்ஸ் பிராஸ்னன் மாதிரி இல்லை என்று பலத்த குற்றசாட்டு வந்தது ஆனால் அதையும் மீறி காசினோ ராயல் வசூல் அள்ளியது, இதிலும் சிறப்பாகவே நடித்துள்ளார். இந்த படம் 22 வது ஜேம்ஸ் பாண்ட் படம்.

ஒரு அதிரடியான சண்டை படம் என்று பார்த்தால் படம் ஓகே, பாண்ட் படமாக எதிர்பார்த்து பார்த்தால் ஏமாற்றம் தான்.

இதுவரை வெளிவந்த ஜேம்ஸ்பாண்ட் திரைப்படங்கள்  

டாக்டர் நோ (1962)

ஃப்ரம் ருஷ்யா வித் லவ் (1963)

கோல்டுஃபிங்கர் (1964)

தண்டர்பால் (1965)

யூ ஒன்லி லைவ் ட்வைஸ் (1967)

ஆன் ஹெர் மெஜஸ்டிஸ் சீக்ரட் சர்வீஸ் (1969)

டயமண்ட்ஸ் ஆர் ஃபாரெவெர் (1971)

லைவ் அண்ட் லெட் டை (1973)

தி மேன் வித் தி கோல்டன் கன் (1974)

தி ஸ்பை ஹூ லவ்ட் மீ (1977)

மூன்ரேக்கர் (1979)

ஃபார் யுவர் ஐஸ் ஒன்லி (1981)

ஆக்டோபுஸ்ஸி (1983)

எ வ்யூ டூ கில் (1985)

தி லிவிங் டேலைட்ஸ் (1987)

லைசென்ஸ் டூ கில் (1989)

கோல்டன் ஐ (1995)

டுமாரோ நெவர் டைஸ் (1997)

தி வேர்டு இஸ் நாட் எனஃப் (1999)

டை அனதர் டே (2002)

கேசினோ ராயல் (2006)

குவாண்டம் ஆஃப் சோலஸ் (2008)

Buzz It

Thursday, November 06, 2008

ரஜினி + ரசிகர்கள் + மற்றவர்கள் = விமர்சனம்

ரஜினியின் பேட்டியை ஒளிபரப்பிய சன் டிவி குசேலன் சம்பந்தப்பட்ட கேள்வி பதில்களை ஒளிபரப்பவில்லை, முதலில் இந்த பேட்டிகளை எப்படி ஒளிபரப்பியது என்றே புரியவில்லை!!! குசேலன் வெளியீட்டில் இருந்து சமீப காலங்களில் ரஜினி எதிர்ப்பு செய்தியாகவே கூறி கொண்டு இருந்தது. ஆனால் சன் டிவி இந்த பேட்டியை ஒளிபரப்பியதன் மூலமே நல்ல ரீச் கிடைத்தது என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.  

வழக்கம் போல ரஜினி பேட்டியில் குறை கூறி கிண்டலடித்து, திட்டி பேசுபவர்கள் பேசி கொண்டே தான் இருக்கிறார்கள்..இதெல்லாம் புதுசா என்ன! :-) எத்தனை பார்த்து இருக்கோம் ;-) ஒருத்தரை பிடிக்கலைனா அவர் என்ன செய்தாலும் பேசினாலும் குற்றம் தான், அது நொள்ளை இது நொட்டையினு ஏதாவது குறை கண்டு ஏதாவது சொல்லிட்டே இருப்பாங்க.   

இதுல இந்த இந்த தினமலர் போன்ற பத்திரிக்கைகள் வேறு..இவங்களா ஒரு தேதி அறிவித்து சந்திப்பு என்று போட்டு அன்று கல்லா கட்டிப்பாங்க, அப்புறம் சந்திப்பு நடக்கலைனா (எப்படி நடக்கும்) ரஜினி ரசிகர்களுக்கு ஹல்வா கொடுத்தாட்டாருன்னு அதையும் செய்தியா போட்டு கல்லா கட்ட வேண்டியது. அப்புறம் பேட்டி முடிந்ததும் ரஜினி ஓட்டம்! னு அண்ட புளுகு புளுக வேண்டியது. நீங்களாகவே அறிவிப்பு செய்தீங்க நீங்களாகவே இல்லைன்னு சொன்னீங்க இதற்க்கு ரஜினி என்ன பண்ணுவார். 

ரஜினி ரசிகர்கள் கூட்டம் நடந்து விட்டது நாட்டுல இருக்கிற அத்தனை பிரச்சனையும் தீர்ந்து விட்டது என்று குமுதம் கார்ட்டூன் போட்டுள்ளது, ஏன்யா! நடக்காத சந்திப்பை கவர் ஸ்டோரி, கவர் இல்லாத ஸ்டோரி, சூப்பர் ஸ்டோரி னு போட்டு காசு பார்க்க வேண்டியது (இந்த சந்திப்பையும் எப்படியும் இரண்டு வாரத்திற்காவது ஓட்டுவீங்க) அப்புறம் நீங்களே இந்த மாதிரி கார்ட்டூன் போட்டு நக்கல் அடிக்க வேண்டியது. குழந்தையையும் கிள்ளி விட்டு தொட்டிலையும் ஆட்டுறது என்பது இது தானா! ரஜினியா வந்து ஒவ்வொரு முறையும் தேதி கூறி தள்ளி வைத்துட்டு இருந்தாரு! அப்படியே தள்ளி வைத்தாலும் அது ரஜினிக்கும் ரசிகர்களுக்கும் உள்ள பிரச்சனை உங்களுக்கென்ன! நீங்க தான் நாட்டு மக்கள் பயன் பெற உருப்படியான படங்களை!!! நடு பக்கத்தில் போட்டு நாட்டு மக்களுக்கு சேவை ஆற்றிட்டு இருக்கீங்கல்ல, எந்த ஒரு சினிமா சம்பந்தப்பட்ட செய்தியும் போடாம மக்களுக்கு அறிவு வளர்க்கும் திருக்குறள் சத்யசோதனை பற்றிய கருத்துக்களை கூறிட்டு இருக்கீங்கல்ல அதையே தொடர்ந்து செய்ய வேண்டியது தானே..உங்களை யாரு வந்து ரஜினி சந்திச்சாரா பேசினாரா மூச்சுட்டாரா தும்மல் போட்டாரான்னு வந்து பார்க்க சொன்னது. போய் எல்லோரும் முதல்ல உங்க வீட்ட சுத்தம் செய்யுங்க..அப்புறம் வந்து அடுத்தவன் வீடு நாறுதுன்னு சொல்லலாம்.
 
ரஜினி அரசியலுக்கு வருகிறார் வரலை அது ரஜினிக்கும் ரசிகர்களுக்கும் உள்ள பிரச்சனை, என்னமோ ரஜினி ரசிகர்கள் மேல ரொம்ப அக்கறை மாதிரி எல்லோரும் மாஞ்சு மாஞ்சு விவாதிச்சுட்டு இருக்காங்க, ஐடியா கொடுத்துட்டு இருக்காங்க. இதுல இவர்கள் எல்லாம் எப்ப திருந்த போகிறார்களோ என்று வசனம் வேறு! சிரிப்பு தான் வருது. வீட்டுல உட்காந்துட்டு அவன் சரி இல்லை இவன் ஏமாத்துறான், இவனுகளுக்கு வேற வேலை வெட்டியே!!! கிடையாது, பால் ஊத்துறான், கற்பூரம் காட்டுறான் னு சொல்ற ஒரு சில பேர் இந்த வலைப்பதிவை கட்டிட்டு, எப்ப பார்த்தாலும் தமிழ்மணத்துலையே குத்த வைத்து உட்காந்துக்கிட்டு எந்த மாதிரி பதிவு போட்டு ஹிட் ஏத்தலாம், எவனை திட்டலாம், எப்படி ஒருத்தனை கட்டம் கட்டலாம் னு (இன்னும் கொஞ்சம் இருக்கு நாகரீகம் கருதி குறிப்பிடவில்லை) கம்ப்யூட்டரை கட்டிட்டு அழ வேண்டியது இதுல மற்றவர்களுக்கு அறிவுரை மற்றும் கிண்டல் வேறு!, வெட்டி வேலை செய்கிறான் என்று. ஒருத்தன் என்ன செய்தாலும் குற்றம் அதே நாம செஞ்சு அதை யாரும் கேட்கலைனா நாம குற்றமே செய்யலைன்னு அர்த்தம் கிடையாது. ரசிகனாவது பால் ஊத்துறதையும் கற்பூரம் காட்டுறதையும் அந்த ஒரு நாள்ல முடிச்சுட்டு அவன் பொழைப்ப பார்க்க போயிடுறான், ஆனா அவனை கிண்டல் செய்யும் மற்றவர்கள்...எதற்கெடுத்தாலும் லாஜிக் பார்த்து பேசும் அதி புத்திசாலிகள்... !!!

அவன் கண்ணுக்கு தெரிஞ்சு வெட்டி செலவு பண்ணுறான், நாம கண்ணுக்கு தெரியாம வெட்டி செலவு பண்ணிட்டு இருக்கோம், நேரத்தை விரயம் செய்து கொண்டு இருக்கிறோம். இந்த அதி புத்திசாலிகளுக்கு தன்னிடம் உள்ள குறைகள் புரியாது சொன்னாலும் அதற்க்கு ஏதாவது லாஜிக் பேசுவாங்க. இப்படி இருக்கிறவங்க தங்களிடம் உள்ள பிரச்சனைகளை உணர மாட்டாங்க..அடுத்தவன் சரி இல்லை, முட்டாள்னு குறை கூறிட்டு இருப்பாங்க. ஒருத்தனை விரல் நீட்டி குற்றம் கூறும் போது மற்ற விரல்கள் நம்மை நோக்கி தான் இருக்குங்கறதை மறந்துடாதீங்க. 

அவசியமில்லாமல் ஒருவரை குறை கூறி அல்ப சந்தோசப்படுவதையும் அடுத்தவருக்கு அறிவுரை கூறுகிறேன் பேர்வழி என்று நக்கல் அடிப்பதையும் ஐடியா கொடுப்பதையும் விட்டு விட்டு, அதி புத்திசாலிக பாஷையில சொல்வதுன்னா உருப்படியா வேற வேலை இருந்தா போய் பாருங்க இல்ல... நல்ல!! பதிவு எழுத முயற்சி செய்யுங்க. ஏன்னா! நீங்க தான் ஒவ்வொரு நிமிடத்தையும் பயனுள்ள வழியில் செலவழிக்கிறவங்க ஆச்சே!

Buzz It