வெள்ளைக்காரர்களை கண்டு நமக்கேன் தாழ்வு மனப்பான்மை?
நான் கணிப்பொறி துறையில் முதலில் இருந்தது பீல்ட் வேலையில் தான், ஒவ்வொரு நிறுவனமாக அல்லது வீடாக சென்று அவர்களுக்கு ஏற்பட்டு இருக்கும் மென்பொருள் மற்றும் கணிப்பொறி பிரச்னையை சரி செய்வது தான் என் வேலை, அப்போது எனக்கு வெளிநாட்டு நபர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை.
அதன் பிறகு என் நண்பன் செய்த உதவி மூலம் நான் ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தேன். அங்கு பல நாட்டு நபர்களுடன் பழக வாய்ப்பு கிடைத்தது. எனக்கு முதலில் வெளிநாட்டு நபர்கள் என்றால் அது வெள்ளை தோல்காரர்கள் என்று எண்ணம், கறுப்பர்கள் (நீக்ரோ) பற்றி அவ்வளவாக நினைப்பதில்லை. எனக்கு அவர்களிடம் பேசுவது என்றால் ஏனோ உள்ளுக்குள் பயமாகவே இருக்கும் (நமக்கு ஆங்கிலம் வேறு அப்போது சரியாக வராது, அப்ப இப்ப சரியான்னு கேட்காதீங்க ஹி ஹி ஹி இப்போதும் சுமார் தான்)
அவர்கள் நடை உடை பாவனை பேச்சு எல்லாமே ஒரு இது இது ... ஆங்! ஒரு கெத்து இருக்கும். அதனாலேயே எனக்கு அவர்கள் மீது ஒரு ஆச்சர்யம் மற்றும் கவர்ச்சி ..ஆகா என்னமா இருக்காங்க! எப்படி சூப்பரா பேசுறாங்க தைரியமா ன்னுட்டு. அப்போ எனக்கு கொஞ்சம் விவரம் இல்லா வயசு மற்றும் கொஞ்சம் வெகுளி (சத்யமாங்க நம்புங்க) ரொம்ப எல்லாம் யோசித்து பார்க்க மாட்டேன், அப்புறம் எதாவது விசயத்துல அடி வாங்குனதும் உஷாராகி அந்த தவறை செய்ய மாட்டேன்.
வெளிநாட்டினர் வந்து பேசினாலே வாய் முழுவதும் பல்லாகி விடும், அவங்க சொல்லுற சப்பை ஜோக்குக்கெல்லாம் எதோ கவுண்டமணி ஜோக் கேட்டா மாதிரி விழுந்து விழுந்து சிரிப்பேன், நான் மட்டுமில்ல பெரும்பான்மையானவங்க அப்படி தான் இதுல நிறுவன பெரிய தலைகளும் அடக்கம். அவங்க வரும் போது மட்டும் மரியாதையின் அளவு கூடி விடும், உடனே அவர்கள் கேட்கும் கேள்விக்கு எச்சி முழுங்கி இயல்பாக இல்லாமல் ஒரு வித பயத்துடனும் எதோ காவல் துறை அதிகாரியிடம் பதில் சொல்வது போலவே எல்லோரும் நடந்து கொள்வார்கள். இதில் ஒரு சிலர் விதிவிலக்கு. எங்கும் எதற்கும் விதிவிலக்கு உண்டு அல்லவா!
கிடைத்த அனுபவங்கள் நண்பர்களிடம் அறிந்து கொண்டது என்று இந்த நிலை என்னிடம் நாளாக நாளாக மாறியது. 50 ருபாய் கொடுத்தால் 500 ரூபாய்க்கு முகபாவனை காட்டக் கூடாதுன்னு ரொம்ப தாமதமா தான் புரிந்தது.
என் அப்பா சிங்கப்பூர் வந்த பொழுது, என் அப்பா இங்குள்ளவர்களிடம் பேசியது மற்றும் அவர்களுக்கு கொடுத்த அதீத மரியாதை, சிரிப்பு மற்றும் பணிவு எனக்கு ரொம்ப அதிகமாகவே தோன்றியது, இது குறித்து என் அப்பாவுடன் எனக்கு வாக்குவாதம் ஏற்பட்டது (என் அப்பாவுக்கும் வெளிநாடு புதிதல்ல, ஆனால் இடைவெளி அதிகம், 40 வருடங்களுக்கு பிறகு இந்த பயணம்), ஏன் அவர்களிடம் இப்படி பணிந்து போகிறீர்கள், அவர்களும் நம்மை போலவே தானே டோண்டு ஐயா பாணியில் சொல்வதென்றால் நாம் என்ன அவர்களுக்கு அடிமையா? நமக்கு இன்னும் அந்த அடிமை புத்தி மறையவில்லையா? எதற்கு அவர்களுக்கு தேவை இல்லாமல் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் அல்லது ரொம்ப பணிவாக இருக்க வேண்டும் என்று விவாதம் சென்றது சண்டை எல்லாம் இல்லைங்க ஒரு கலந்துரையாடல்.
இதுவே என்னை பதிவு எழுத தூண்டியது. மற்றவர்களிடம் பணிவாக இருப்பது தவறு என்கிற அர்த்தத்தில் கூறவில்லை, பணிவு வேறு அதீத பணிவு வேறு. அலுவலகத்தில் நாமும் பணி புரிகிறோம் நம்மை போலவே அவர்களும் வேறு ஒரு ஊரில் பணி புரிகிறார்கள், இதில் என்ன அவர்கள் உயர்ந்து விட்டார்கள்? நாம் ஏன் அவர்களுக்கு பயந்து இருக்க வேண்டும். நாம் நம் வேலையை செய்ய இவர்களிடம் ஏன் பயப்பட வேண்டும் வழிந்து கொண்டு இருக்க வேண்டும். அதற்காக அவர்களை மதிக்க வேண்டாம் என்கிற ரீதியில் கூறவில்லை. இயல்பாக இருக்க வேண்டியது தானே என்று கேட்கிறேன். நம் தன்மானத்தை ஏன் விட்டு தர வேண்டும்.
வெளிநாட்டில் இருந்து ஒரு கடை நிலை ஊழியர் வருகிறார், மற்றும் கோவையில் இருந்து ஒரு மிக உயர் அதிகாரி வருகிறார் என்றால் நம்மவர்கள் வெள்ளை தோல் காரர் என்பதால் அவரை தான் தலையில் தூக்கி வைத்து கொண்டாடுவார்களே தவிர இவருக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க மாட்டார்கள். ஏன் இந்த பாகுபாடு? அவரிடம் கடலை போடுவதை பெருமையாக கருதுவார்கள், அவர் எனக்கு நண்பர் என்று கூறுவதில் பெருமிதம் அடைவார்கள், அந்த நபர் அங்கு சென்று ஒரு மின்னஞ்சலும் அனுப்பி விட்டால் போதும் இவங்க மற்றவர்களிடம் பண்ணுற அலப்பறை தாங்காது. அவருடன் நட்பு பாராட்டுவது தவறில்லை,ஒரு பெருமைக்காக செய்தால் அதை என்னவென்று சொல்வது.
இதே நம்மவர்கள் கறுப்பர்கள் வெளிநாட்டில் இருந்து வந்தால் கண்டுக்க மாட்டார்கள், ஒரு இளக்காரமான நிலை தான் காணப்படும். நம்மவர்களே இப்படி ஒரு இனவெறி காட்டும் போது, வெள்ளை தோல் காரர்கள் கருப்பர்களை மதிக்காமல் இருந்ததில் எனக்கு ஆச்சர்யம் இல்லை. நீங்கள் அலுவலகம் என்றெல்லாம் கவனிக்க தேவையில்லை, வெள்ளை தோல் காரர்களை பேருந்திலோ அல்லது அவர்கள் நம் மக்கள் அருகில் உட்கார்ந்தாலோ போதும் அவர்களுக்கு பெருமை பிடிபடாது, அப்படியே குளிர்ந்து விடுவார்கள். இதே கறுப்பர் அருகில் அமர்ந்தால் வெறுப்பின் உச்சிக்கே சென்று விடுவார்கள், அல்லது ஒரு நக்கலான பார்வை முகத்தில் இருக்கும்.
கருப்பான தோல் என்றால் அப்படி என்ன இளக்காரம்? அவர்கள் எதில் குறைந்து விட்டார்கள்? எந்த விதத்தில் அவர்கள் தாழ்ந்து விட்டார்கள்? நாம் கருப்பு மற்றும் அடிமை பட்டு இருந்தோம் என்ற எண்ணம் மேலோங்கியே தாழ்வு மனப்பான்மையில் வெள்ளை தோல்காரர்களிடம் மிக பணிவாக இருக்கிறோம்(வேறு காரணம் உங்களுக்கு தெரிந்தால் கூறலாம்), இந்நிலையில் கருப்பர்களை (நீக்ரோ) பார்த்து நாம் கேவலமாக கருதுவதை நினைத்து சிரிப்பதா அழுவதா என்றே தெரியவில்லை.
மனிதர்களை மனிதர்களாக பார்க்காமல் அவர்களின் தோல் நிறம் கொண்டு மதிப்பு தரும் நிலை என்று மாறுமோ!






















