ஒலிம்பிக் போட்டிகள் நிறைவு பெற்று விட்டன, தொடக்க விழாவில் சில ஏமாற்று வேலைகள் செய்தார்கள் என்ற குற்றசாட்டுகள் மற்றும் பல குற்ற சாட்டுக்கள் ஒதுக்கி விட்டு பார்த்தால் சீனா வெற்றிகரமாகவே ஒலிம்பிக் போட்டிகளை நடத்தி உள்ளது. அதன் கட்டமைப்பை குறிப்பிட்டு சொல்ல வேண்டும், போட்டிகளுக்காக கட்டப்பட்ட விளையாட்டு திடல்கள், நீச்சல் குளங்கள் மற்றும் அரங்கங்கள் என்று அனைத்தும் பார்த்த வரையில் சிறப்பாகவே இருந்தது. நாம் நேரில் சென்று பார்க்கவில்லை தொலைக்காட்சியில் பார்ப்பதை வைத்தே கூறுகிறோம். ஒருவேளை நேரில் பார்த்தவர்களுக்கு அதில் உள்ள குறைகள் தெரிந்து இருக்கலாம்.
சீனா இதில் பெற்ற தங்கங்கள் பற்றி பாராட்டியே ஆக வேண்டும், தங்கங்கள் பற்றி என்பதை விட எப்படி முன்னேறி வந்து இருக்கிறது என்பது. 2000 ம் ஆண்டு சிட்னியில் நடைபெற்ற போட்டியில் அமெரிக்கா 39 தங்கத்தையும் சீனா 28 தங்கத்தையும் பெற்றது, 2004 ம் ஆண்டு ஏதென்ஸ் ல் நடைபெற்ற போட்டிகளில் அமெரிக்கா 35 தங்கத்தையும் சீனா 32 தங்கம் என்று மிக நெருங்கி வந்தது. பொதுவாக சீனா அதிக தங்கம் பெற்று முதலிடத்தில் இருக்கும், அதலெடிக்ஸ் தொடங்கியவுடன் அமெரிக்கா அடித்து நொறுக்கி முதலில் வந்து விடும், இந்த முறை அது எதற்கும் வாய்ப்பு கொடுக்காமல் அசத்தலாக தொடர்ந்து முன்னணியில் இருந்து முதலிடத்தை பெற்று விட்டது. விளையாட்டில் முன்னேற்றம் என்றால் என்னவென்பதை சீனா வை பார்த்து மற்ற நாடுகள் தெரிந்து கொள்ளலாம்.
முடிவில் சீனா 51 தங்கம், 21 வெள்ளி, வெண்கலம் 28 என்று மொத்தம் 100 பதக்கங்களை பெற்று முதலிடத்தை பெற்றுள்ளது. இரண்டாம் இடத்தில் அமெரிக்கா 36 தங்கம், 38 வெள்ளி, 36 வெண்கலம் மொத்தம் 110 பதக்கங்களை பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளது. ரஷ்யா தங்கம் 23, வெள்ளி 21, வெண்கலம் 28 மொத்தம் 72 பதக்கங்களை பெற்று மூன்றாம் இடத்தை பெற்றுள்ளது.
சீனா இந்த முறை பெல்ப்ஸ், உசைன் போல்ட் போல போட்டியின்றி தாறுமாறாக முன்னணிக்கு வந்து விட்டது. அதிலும் ஜிம்னாஸ்டிக் டேபிள் டென்னிஸ் போன்ற போட்டிகளில் வெகுவாக ஆதிக்கம் செலுத்தியது. கடந்த முறை பெற்ற வெற்றிகளை விட இந்த முறை அதிகம் பெற வேண்டும் என்ற அவர்கள் செய்த முயற்சிக்கும் அதற்காக அவர்கள் எடுத்துக்கொண்ட பயற்சிகளையும் கண்டிப்பாக பாராட்டியே ஆக வேண்டும். கடந்த முறை பெற்ற தங்கத்தை விட கிட்டத்தட்ட 20 தங்கம் அதிகம் என்பது எனக்கு சாதாரணமான விசயமாக தெரியவில்லை. இங்கு நமக்கு ஒரு தங்கம் வாங்கவே நாக்கு தள்ளுகிறது, 1 தங்கம் 2 வெண்கலம் வாங்கியதை வரலாற்று சாதனை என்று ஊடகங்கள் வாய் ஓயாமல் கூறுவதை கேட்கும் போதும் படிக்கும் போதும் தர்மசங்கடமாக இருக்கிறது. நம்மவர்கள் வெற்றி பெற்றது மகிழ்ச்சி அளித்தாலும் இவர்கள் அனைவரும் மிகைப்படுத்தி பாராட்டி கொண்டு இருப்பதை போலவே தோன்றுகிறது. நம்மவர்கள் பாராட்டினால் இதை போல பாராட்டுகிறார்கள் இல்லை என்றால் வேறு ஏதாவது கூறி குறை சொல்கிறார்கள். இரண்டுமே சரி இல்லை என்பதே என் கருத்து.
ஒலிம்பிக் ல் குறிப்பிடத்தக்கவை
ஒலிம்பிக் ல் என்னை பலர் கவர்ந்தவர்கள் என்றாலும் குறிப்பிட்டு சொல்ல கூடியவர்கள் பெல்ப்ஸ் ம் உசைன் போல்ட்டும்.
இதில் அமெரிக்காவை சேர்ந்த பெல்ப்ஸ் சொல்லி அடிக்கும் கில்லி போல நீச்சலில் சொல்லி சொல்லி 8 தங்கம் வாங்கி உலக சாதனையை முறியடித்தார். தங்கம் வெல்வதை என்னமோ கடையில் மிட்டாய் வாங்குவது போல வாங்கியதை பார்த்த போது தலை சுற்றாத குறை தான். அவர் ஒரு சில போட்டிகளில் வெற்றி பெறும் போது அவருக்கும் அவர் பின்னால் வருபவருக்கும் இடையே உள்ள தூரத்தை பார்த்த போது யோவ்! என்னையா போட்டி வைக்கறீங்க என்கிற ரேஞ்சுக்கு வந்து கொண்டு இருந்தார்.
அடுத்து ஜமைக்காவின் உசைன் போல்ட், இவர் ஓடியதை பார்த்த போது இவர் மனுசனா என்றே சந்தேகம் வந்து விடும் அந்த அளவுக்கு தாறு மாறாக ஓடி வெற்றி பெற்றார். 100 மீட்டர், 200 மீட்டர் மற்றும் 400 தொடர் ஓட்ட பந்தயம் மூன்றிலும் தங்கம் வென்றார். 100 மீட்டர் ஓட்டத்தில் வெற்றி கோட்டை தொடும் முன்பே கொண்டாட ஆரம்பித்து விட்டார் அதனால் அவருடைய வெற்றி நொடிகளில் சில நொடிகள் அதிகம் ஆகி விட்டது. இது எனக்கு வருத்தமாகவே இருந்தது. அவர் 200 மீட்டர் ஓட்டத்தை படம் எடுக்க டிராலியில் கண்ணொளி (வீடியோ) எடுத்துக்கொண்டு சென்றவர்களே அவர் ஓட்டத்தை எதிர்பார்க்காமல் திணறி விட்டார்கள்.
இவை தவிர இந்தியாவின் அபினவின் அலட்டல் இல்லாத வெற்றி மற்றும் சுஷில்குமார், விஜேந்தர் வெற்றிகள் (நமக்கு) குறிப்பிடத்தக்கவை
இந்த ஒலிம்பிக் ல் 45 உலக சாதனைகள் 127 ஒலிம்பிக் சாதனைகள் நிகழ்த்தப்பட்டது.
குத்து சண்டையில் மிக பிரபலமான நாடு கியுபா, இந்த முறை 40 ஆண்டுகளுக்கு பிறகு ஒரு தங்கம் கூட பெறவில்லை.
பல சாதனைகள், நம்ம முடியாத வெற்றிகள், தோல்விகள் பிரம்மாண்ட தொடக்க மற்றும் முடிவு விழாக்கள் என்று பெய்ஜிங் ஒலிம்பிக் இனிதே முடிந்து விட்டது. அடுத்த ஒலிம்பிக் போட்டிகள் இங்கிலாந்தில் லண்டனில் நடைபெற உள்ளது. விளையாட்டில் இந்தியா எங்கேயோ ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப தூரத்தில் உள்ளது. நம்மவர்கள் விளையாட்டை விளையாட்டாக கருதி வருகிறார்கள். நமது அரசியல்வாதிகளும், அரசும் மற்றும் மக்களின் எண்ணங்களும் மாறும் வரை இந்தியா விளையாட்டில் முன்னேற வாய்ப்பே இல்லை. நம்மவர்கள் மாறினாலே அதுவே பெரிய ஒலிம்பிக் சாதனை தான்.
No related posts.

{ 10 comments… read them below or add one }
“அசத்தலான “ஒலிம்பிக்” துவக்கவிழா காட்சிகள்” முதல் ஒலிம்பிக்ஸ் பற்றிய தங்கள் கருத்துக்களுடன் பல பதிவுகள் தந்து
” “அசத்திய சீனா – ஒலிம்பிக் 2008 ஒரு கண்ணோட்டம்” ” என நிறைவாக ஒரு பதிவும் தந்து அசத்தி விட்டீர்கள் கிரி.
எட்டு தங்கம் வாங்கிய பெல்ப்ஸ் பற்றிய உங்கள் விவரிப்பை வெகுவாகு ரசித்தேன்.
//நம்மவர்கள் விளையாட்டை விளையாட்டாக கருதி வருகிறார்கள்.//
விளையாட்டாக ஒதுக்கக் முடியாத கருத்து.
என் மீதுள்ள அன்பில் என்னை அதிகமாகவே பாராட்டி விட்டீர்கள் என்றே கருதுகிறேன், உங்கள் அன்பிற்கு நன்றி.
நாம் அனைவரும் இதை பற்றி பேசுகிறோம் ஆதங்கப்படுகிறோம் ஆனால் யோசிக்க வேண்டியவர்களும் பொறுப்பில் இருப்பவர்களும் இதை பற்றி நினைக்காமல் இருப்பது வருத்தமளிக்கிறது.
உங்கள் தொடர் வருகைக்கும் உற்சாகப்படுத்தும் வார்த்தைகளுக்கும் மிக்க நன்றி.
மிக அழகாக கூறினீர்கள் கிரி, //நம்மவர்கள் விளையாட்டை விளையாட்டாக கருதி வருகிறார்கள்//, மேலும் விளையாட்டு என்றால் அது கிரிக்கெட் மட்டும் தான்… இது என்று மாறி மற்ற விளையாட்டிற்கும் முக்கியத்துவம் கொடுக்கபடுகிறதோ அன்று கண்டிப்பாக நாம் முன்னேறிவிட்டோம் என்று கூறலாம்.
ஒலிம்பிக் போட்டிகளை “Star hub” சிறப்பாக ஒளிபரப்பியதை இங்கு சொல்லியே ஆக வேண்டும் …
கிரி,என்று சாதியும், மொழிவாரியாக பிரிந்து கொண்டு செயல்படுவது இந்தியாவில் இல்லாது போகுமோ அன்று நாம் விளையாட்டில் வெற்றி பெறுவதைப் பற்றி கனவு காணலாம்.அதுவரை
chakde படத்தில் சொல்வதைப் போல் “இந்தியா ஒலிம்பிக் போட்டியில் தேர்வானதே பெரிய விஷயம்; இதில் வெற்றியைப் பற்றி பேசி என்ன பயன்?
எரிச்சல் தரும் விஷயம் என்னவென்றால் ”குப்பனுக்கும் சுப்பனுக்கும் தோன்றும் இந்த கருத்து பொறுப்பில் இருக்கும் மனிதர்களுக்கு தோன்றாதா?இந்திய அணி வெற்றி பெறவில்லையென்றால் தேர்வாளர்,பயிற்ச்சியாளர்,மந்திரி அனைவரின் ஒரு வருட சம்பளம் பிடித்தம் செய்ய வேண்டும்…. அப்பத் தெரியும்!!
மிகவும் நேர்த்தியாக சீனர்கள் போட்டியை நடத்தினார்கள்.
//Vidhya said…
விளையாட்டு என்றால் அது கிரிக்கெட் மட்டும் தான்… இது என்று மாறி மற்ற விளையாட்டிற்கும் முக்கியத்துவம் கொடுக்கபடுகிறதோ அன்று கண்டிப்பாக நாம் முன்னேறிவிட்டோம் என்று கூறலாம்.//
அரசும் அதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும்
//ஒலிம்பிக் போட்டிகளை “Star hub” சிறப்பாக ஒளிபரப்பியதை இங்கு சொல்லியே ஆக வேண்டும்//
உண்மை தான் வித்யா. தவறவிட்டாலும் மறு ஒளிபரப்பில் பார்க்க முடிந்தது.
//Vijay said…
எரிச்சல் தரும் விஷயம் என்னவென்றால் ”குப்பனுக்கும் சுப்பனுக்கும் தோன்றும் இந்த கருத்து பொறுப்பில் இருக்கும் மனிதர்களுக்கு தோன்றாதா?//
இதுவே என்னுடைய கேள்வியும்..நம்மை போல பலர் இது பற்றி விவாதிக்கிறார்கள்..ஆனால் இது பற்றி யோசிக்க வேண்டிய அரசாங்கம் எந்த முயற்சியும் எடுக்காமல் இருக்கிறது. நம்முடைய வரிப்பணத்தை வீண் செலவு செய்து கொண்டுள்ளார்கள். வேடிக்கை தான் பார்க்க முடிகிறதே தவிர எதுவும் செய்ய முடியவில்லை.
உங்கள் தொடர் வருகைக்கு நன்றி விஜய்.
//ARUVAI BASKAR said…
மிகவும் நேர்த்தியாக சீனர்கள் போட்டியை நடத்தினார்கள்.//
வாங்க பாஸ்கர் நீண்ட நாட்களுக்கு பிறகு வந்து இருக்கீங்க.
சீனா கலக்கி விட்டது….ஒவ்வொரு நிகழ்ச்சியும் அருமை. போட்டிகளும் சிறப்பாக நடை பெற்றன. இந்த அளவுக்கு சிறப்பாக செய்வார்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை.
எங்கண்ணே நம்மூருல வீரர்கள் விளையாடுவதற்கு முன் அரசியல் விளையாடிருதே
//புதுகை.எம்.எம்.அப்துல்லா said…
//
எங்கண்ணே நம்மூருல வீரர்கள் விளையாடுவதற்கு முன் அரசியல் விளையாடிருதே
உண்மை தான் அப்துல்லா. இவை எல்லாம் மாற பல வருடங்கள் பிடிக்கும்.
உங்கள் வருகைக்கு நன்றி