“தம்பி” – ஒரு தாமத திரை விமர்சனம்

by கிரி on May 26, 2008

thambi1 தம்பி   ஒரு தாமத திரை விமர்சனம்

தம்பி படம் சின்னத்திரையில் வந்த போது அதை பார்த்து சரி ஒரு விமர்சனம் எழுதுவோம் என்று முடிவு செய்தேன், கதை அனைவருக்கும் தெரிந்தது தான் என்பதால் அந்த படத்தை பற்றிய என் கண்ணோட்டத்தை பதிவு செய்து இருக்கிறேன்.

முதலில் இப்படி பட்ட ஒரு கதையை படமாக்க துணிந்த இயக்குனர் சீமானுக்கும் நடித்த மாதவனுக்கும் என் வாழ்த்துக்கள். திரையரங்கிலேயே இந்த படத்தை பார்த்து இருந்தாலும், திரும்ப ஒரு முறை பார்க்க என்னவோ எனக்கு இது சலிக்கவில்லை.

அமுல்பேபி யாக நடித்து கொண்டு இருந்த மாதவன் ஆயுத எழுத்து படத்தின் மூலம் ஆக்ரோஷ காட்சிகளிலும் வெளுத்து கட்டுவேன் என்று சென்னை பாஷையுடன் நிரூபித்து இருந்தார். எனக்கு உண்மையிலேயே அந்த படத்தில் மாதவனின் நடிப்பை பார்த்து மிகுந்த ஆச்சர்யம். அதையே அவர் தம்பியிலும் தொடர்ந்து இருந்தார்.

இந்த படத்தில் வரும் “உடலினை உறுதி செய்” என்ற பாடலும் அதன் இசையும் அருமையாக இருக்கும். நமக்கு கேட்கும் போது நம்மை அறியாமல் அதன் வடிவத்தில் லயித்து விடுகிறோம்.

மார்கெட்டில் மாமூல் கேட்டு ஒரு அப்பாவியை ரவுடிகள் அடிக்க, அங்கே வரும் மாதவன் அவர்களை அடித்து துவைத்து, இப்ப உனக்கு எப்படி வலிக்கிறதோ அதே போல தானே அவருக்கும் இருக்கும் என்று கேட்கும் போதும், உனக்கு இருக்கிற அதே ரத்தமும் சதையும் தானே அனைவருக்கும் என்று கேட்டு கண்ணை உருட்டி மிரட்டும் போது நடிப்பில் மிளிர்கிறார்.

பூஜா, மாதவன் செய்யும் அடிதடியை பார்த்து கடுப்பாகி அவரை திட்டுவார், அதற்கு மாதவன் அவர்கள் தவறு செய்தார்கள் அதனால் அடித்தேன் என்பார், அதற்கு பூஜா அதற்கு காவலர்கள் இருக்கிறார்கள் சட்டம் இருக்கிறது நீ எப்படி செய்யலாம் என்று வாதம் செய்வார். மாதவன் சரிங்க நான் செய்தது தவறு தான் என்று கூறிவிட்டு சென்று விடுவார்.

ஒரு நாள் பூஜா தனது நண்பிகளுடன் ஒரு கடையில் பேசிக்கொண்டு இருக்கும் போது அங்கே இருக்கும் சில இளைஞர்கள் அவர்களை அசிங்கமாக தங்களது கைத்தொலைபேசி மூலம் புகைப்படம் எடுப்பார்கள். எதற்கு வம்பு என்று அவர்கள் அனைவரும் கிளம்பும் போது அந்த இளைஞர்கள் அவர்களிடம் உடையை இழுத்து கலாட்டா செய்வார்கள். அப்போது அங்கே அமர்ந்து இருக்கும் மாதவன் எதுவும் கண்டு கொள்ளாமல் இருப்பார். ஒரு பெண் ஓடி சென்று சார் எங்களை காப்பாத்துங்க என்று கூறும் போது அவர் அவர்களிடம் வந்து அண்ணே! பாவம்ணே இவங்க ..பொண்ணுக கிட்ட நீங்க இப்படி நடக்கலாமா !! அவங்கள விட்டுடுங்க ன்னு கெஞ்சுவார். அவர்கள் அவரை தள்ளி விட்டு தொடர்ந்து கலாட்டா செய்வார்கள், ஆனாலும் இவர் திரும்ப கெஞ்சுவார் அவரை நான்கு பேர் பிடித்துக்கொள்வார்கள். அவர்களை தள்ளிவிட்டு பூஜாவிடம் தன் கண்களை உருட்டி கொண்டு இப்ப நான் என்ன செய்ய? என்ன செய்ய? என்று கேட்பார் அதற்கு பதில் கூற முடியாமல் பூஜா அழும் போது அனைவரையும் அடித்து ஓட விடுவார். பிறகு பூஜாவிடம் வந்து இப்ப எல்லாம் உபதேசம் பண்ணுனா எவன் கேட்குறான் உதைச்சா தான் கேட்குறான் என்று கூறி விட்டு செல்வார். அந்த காட்சி நம் மனதில் நிற்கிறது.

இதில் இருந்து எனக்கு ஒன்று புரிந்தது, மக்கள் ஏன் நடிகர்களை தூக்கி வைத்து ஆடுகிறார்கள் அல்லது அவர்கள் மீது பிரியமாக இருக்கிறார்கள் என்று. நமக்கும் இந்த மாதிரி ரவுடி தனத்தை செய்பவர்களை கண்டால் அடித்து துவைக்க வேண்டும் என்று ஆத்திரம் வரும், ஆனால் நடைமுறையில் அது சாத்தியம் இல்லை என்பதால், நம்மால் செய்ய முடியாததை திரையில் ஒருவர் செய்யும் போது, பார்ப்பவர்கள் தான் அடித்ததாகவே கருதுகிறார்கள். அதனாலேயே அவர்களுக்கு இந்த நடிகர்களை மிகவும் பிடிக்கிறது என்பது என் கருத்து.

சுடும் நிலவு என்ற பாடல் ஒரு அருமையான இசை மற்றும் வரிகள். கேட்பதற்கு ஒரு சுகமான அனுபவம். ஆர்ப்பாட்டம் இல்லாத இசை.

தன்னை காதலிப்பதாக கூறும் பூஜாவிடம், லூஸ் லூஸ் ஒழுங்க படிங்கன்னா sms mms email னு நீங்கெல்லாம் திருந்தவே மாட்டிங்கலான்னு திட்டும் போது பூஜா அந்த திட்டை மிக ரசிப்பார். குறும்பான காதல் காட்சியாக இருக்கும் காதல் இல்லாமல்.

ரவுடிகள் பேருந்தை கொளுத்தும் போது அவர்களுடைய வண்டியை மாதவன் பெட்ரோல் ஊத்தி கொளுத்த போவார், அதற்கு அவர்கள் டேய்! டேய்!! அது என் வண்டிடா!!! என்று கூறும் போது, பேருந்தை காட்டி இதும் உன் வண்டி தாண்டா “இது உங்கள் சொத்து” என்று எழுதி இருப்பதை காட்டுவார். அவர்கள் சென்ற பின் அதை வேடிக்கை பார்த்து கொண்டு இருக்கும் பொது மக்களிடம், 10 பைசா டிக்கெட் விலை ஏத்திட்டா பற்றி எரியுதுள்ள வயிறு ..வேடிக்கை எது நடந்தாலும் வேடிக்கை! கொலை நடந்தாலும் வேடிக்கை!! ரோடு ல எவன் கிடந்தாலும் வேடிக்கை!!! என்று கண்ணை உருட்டி உருட்டி நம்மை (மக்களை) வாங்கு வாங்குன்னு வாங்குவார்.

வில்லன் மாதவனை தன் வழியில் இருந்து ஒதுங்கி போக சொல்லும் போது, நான் மாற மாட்டேன்..உன்னை மாற்றும் வரை மாற மாட்டேன்

“சோம்பேறிக்கு சுவாசிப்பது கூட சிரமம் தான்”

“முடியாதுன்னா அவனுக்கு அவன் தலை முடி கூட பாரம்தான்”

உதைப்பேன்! நீ திருந்தும் வரை உதைப்பேன்!! என்று கொதிக்கும் போது நடிப்பில் நம்மை கவர்கிறார் மாதவன்.

“வீரன்கறவன் உயிரை எடுப்பவன் கிடையாது, தன் உயிரை கொடுத்தாவது ஒன்னொரு உயிரை காப்பாத்தறவன்” என்று கூறும் இதை போன்ற பல வசனங்கள் நம்மை கவர்கிறது.

படத்தில் இறுக்கத்தை குறைக்க நகைச்சுவைக்கு வடிவேல் வருகிறார், ஒரு காட்சியில் மாதவனின் அப்பாவுக்கு டை அடிக்கும் போது அது வடிவேலின் உள்ளங்கய்யில் பட்டு கருப்பாகி விட அதற்கு அவர் அய்யயோ உடம்புல வெள்ளையா இருந்தது அது ஒரு இடம் தான் அதுவும் போச்சா என்று அழும் போது நம் சிரிப்பை அடக்க முடியவில்லை.

தான் படித்த கல்லூரியில் சிறப்பு விருந்தினராக பேசும் போது ஒரு மாணவர் ரவுடி கைய்யால் பரிசு வாங்க மாட்டேன் என்று கூறும் போது சர்ச்சை எழுகிறது. அதற்கு மாதவன் விளக்கமும் கூறுகிறார். அதன் பிறகு தன் தவறை உணரும் அந்த மாணவர் மாதவனுடன் வருவதாக கூறும் போது ..அவர் நல்ல படி காவலர் ஆகு கலெக்டர் ஆகு அதிகாரத்தை கையில் எடு சாதி என்று கூறும் போது நடைமுறையை தெளிவு படுத்துகிறார்.

“இங்கே சைலன்ஸ் என்பதையே சத்தமாக தானே கூற வேண்டி உள்ளது” என்று கூறும் போது அதில் உள்ள அர்த்தம் நம்மை வியக்க வைக்கிறது.

இதில் மாதவன் பெரும்பாலும் ஆங்கில கலப்பு இல்லாமல் தமிழ் சொற்களையே பயன்படுத்தி இருப்பது சிறப்பு. இதற்கு இயக்குனர் சீமானுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்.

பொதுவாக அறிவுரை கூறும் படங்களும், நல்ல சிந்தனைகளை கூறும் படங்களும் நம் ஊரில் ஓடாது, அதனாலேயே அந்த மாதிரியான படங்களை எடுக்க அனைவரும் யோசிக்கிறார்கள். ஆனால் சீமான் அதில் வெற்றி பெற்று இருக்கிறார். எந்த படமாக இருந்தாலும் (இதிலும் பல காட்சிகள் நடைமுறையில் சாத்தியம் இல்லை என்றாலும்) திரைக்கதை சரியாக இருந்தால் எந்த வகை படத்தையும் வெற்றி பெற வைக்க முடியும் செய்திகளை கொண்டு சேர்க்க முடியும் என்பதற்கு “தம்பி” ஒரு உதாரணம்.

No related posts.

{ 15 comments… read them below or add one }

அறிவன்#11802717200764379909 May 26, 2008 at 12:16 PM

உங்கள் பதிவுகள் நெருப்பு நரி உலாவியில் சரியாகத் தெரிவதில்லை,அமைப்பில் ஏதேனும் மாற்ர வேண்டுமா எனப் பாருங்கள்..

Reply

கதிர் May 26, 2008 at 12:50 PM

http://iraval.blogspot.com/2006/08/blog-post_19.html

அப்படியே மாற்று திரைவிமர்சனத்தையும் படிச்சி பாருங்க. :)

Reply

கிரி May 26, 2008 at 2:50 PM

//உங்கள் பதிவுகள் நெருப்பு நரி உலாவியில் சரியாகத் தெரிவதில்லை,அமைப்பில் ஏதேனும் மாற்ர வேண்டுமா எனப் பாருங்கள்..//

அறிவன் நான் எனக்கு தெரிந்தவரை முயற்சி செய்து விட்டேன். உங்களுக்கு ஏதேனும் யோசனை இருந்தால் கூறுங்கள்.

Reply

கிரி May 26, 2008 at 2:58 PM

//அப்படியே மாற்று திரைவிமர்சனத்தையும் படிச்சி பாருங்க. :) //

வாங்க தம்பி :-)

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கண்ணோட்டம் ஒரு பார்வை :-)

Reply

ஆ.கோகுலன் May 26, 2008 at 4:04 PM

கிரி, உங்கள் பதிவில் justify alignment ஐ எடுத்துவிட்டால் ஃபயர்பொக்ஸ் இல் பிரச்சனையிருக்காது. எனக்கு பின்னூட்டமிட்ட நண்பர்களும் இதையே சொன்னார்கள்.

Reply

கிரி May 26, 2008 at 4:10 PM

என்னுடைய template ல் justify என்ற வார்த்தையே இல்லை. center என்ற வார்த்தை தான் உள்ளது. நான் என்னுடைய பதிவை center பண்ணாமல் இருந்தால் firefox ல் சரியாக வருகிறது. ஆனால் எனக்கு அவ்வாறு center பண்ணாமல் வெளியிட விருப்பம் இல்லை. முடிந்தால் என் பிரச்சனையை சரி செய்து தாருங்கள்.

உங்கள் உதவும் எண்ணத்திற்கு நன்றி கோகுலன்.

Reply

இறக்குவானை நிர்ஷன் May 26, 2008 at 4:38 PM

மொத்தத்தில்,
தம்பி – ஒரு துருப்பிடிச்ச கம்பி

(இப்படி ஏதாவது பஞ்ச் சொல்லி முடிச்சிருக்கலாம் தானே?)

Reply

கிரி May 26, 2008 at 4:41 PM

//மொத்தத்தில்,
தம்பி – ஒரு துருப்பிடிச்ச கம்பி

(இப்படி ஏதாவது பஞ்ச் சொல்லி முடிச்சிருக்கலாம் தானே?)//

:-) )))

எனக்கு அவ்வாறு தோன்றவில்லை நிர்ஷன்.

Reply

ரவிசங்கர் May 26, 2008 at 10:50 PM

உங்கள் வார்ப்புருவில் letter-spacing என்று வரும் இடம் எல்லாம் 0px என்று கொடுங்கள். (அது zero pix. ஓ பிக்ஸ் இல்லை)

நீங்கள் பார்க்கும் பிறரது தளத்தில் இந்தப் பிரச்சினை இருந்தால் அதற்கான தீர்வு – Tamil in Firefox

Reply

கிரி May 26, 2008 at 11:25 PM

letter-spacing:.2em; இது ஒன்று தான் இருந்தது, அதில் மாற்றி பார்த்தேன் ஆனால் சரியாகவில்லை.

உங்களுக்கு வேறு எதாவது யோசனை இருந்தால் கூறுங்கள். நன்றி ரவிசங்கர்.

Reply

கிரி May 26, 2008 at 11:47 PM

நீங்க கொடுத்த சுட்டியில் கொடுத்த புதிய பயர் பாக்ஸ் நிறுவியவுடன் எனக்கு சரியாக தெரிகிறது. ஆனால் மற்றவர்களுக்கு இதை நிறுவாமல் எப்படி சரி செய்வது என்று கூறினால் நன்றாக இருக்கும்.

http://www.mozilla.com/en-US/firefox/all-rc.html இதில் இருந்து தான் நிறுவினேன், நீங்கள் கொடுத்த வழிகாட்டியுடன்.

எனக்கு ஒரு சந்தேகம். இதை பயர் பாக்ஸ் வெளியிடும் புதிய பதிப்பில் ஏன் வெளியிடவில்லை? அப்படி வெளியிட்டால் யாருக்கும் எந்த சிரமும் இருக்காது அல்லவா. இதற்க்கு எதுவும் தனி காரணம் உண்டா? இந்த நிறுவல் பலருக்கு தெரியாது என்றே கருதுகிறேன்.

உங்கள் உதவிக்கு நன்றி ரவிசங்கர்.

Reply

U.P.Tharsan May 28, 2008 at 1:08 PM

//பொதுவாக அறிவுரை கூறும் படங்களும், நல்ல சிந்தனைகளை கூறும் படங்களும் நம் ஊரில் ஓடாது.//

இப்ப பல அடிதடி , வெட்டு குத்து படங்களை விட இப்படியான படங்கள் நல்லா ஓடுகிறதுதானே.

Reply

ரவிசங்கர் May 29, 2008 at 1:34 AM

letter-spacing 0em என்று மாற்றியும் ஒழுங்காகத் தெரியாவிட்டால் வழி தெரியவில்லை.

rc 1 என்பது சோதனைப் பதிப்பு. சோதனை முடிந்ததும், விரைவில், firefox 3 முழுப்பதிப்பாக முறையாக எல்லாருக்கும் தெரியுமாறு கிடைக்கும்.

Reply

கிரி June 2, 2008 at 1:34 PM

//இப்ப பல அடிதடி , வெட்டு குத்து படங்களை விட இப்படியான படங்கள் நல்லா ஓடுகிறதுதானே//

வாங்க தர்சன். நீங்கள் சொல்வதை நான் ஆமோதிக்கிறேன். கண்டிப்பாக நல்ல படங்களும் வந்து கொண்டு இருக்கின்றன, எண்ணிக்கை மிக குறைவு அவ்வளவே.

Reply

கிரி June 2, 2008 at 1:37 PM

//rc 1 என்பது சோதனைப் பதிப்பு. சோதனை முடிந்ததும், விரைவில், firefox 3 முழுப்பதிப்பாக முறையாக எல்லாருக்கும் தெரியுமாறு கிடைக்கும்//

உங்கள் தகவலுக்கு நன்றி ரவிசங்கர். புதிய பதிப்பு வந்து விட்டால் பலரின் எழுத்துரு பிரச்சனை சரி ஆகும். ஏனென்றால் இன்டர்நெட் எக்ஸ்ப்லோர் க்கு இணையாக அனைவரும் பயர் பாக்ஸ் பயன் படுத்தி வருகிறார்கள்.

Reply

Leave a Comment

Previous post:

Next post:

Mail Twitter Facebook RSS Feed