என் முதல் விமான பயண அனுபவம் :))

by கிரி on May 8, 2008

flight என் முதல் விமான பயண அனுபவம் :))நான் கணிப்பொறி துறையில் இருந்தாலும் வெளிநாடு செல்லும் வாய்ப்பு கிடைத்தது இல்லை, கணிப்பொறி துறையில் உள்ளவர்கள் பெரும்பாலானவர்கள் ஒருமுறையாவது சென்று இருப்பார்கள். நான் என் நிறுவனத்தில் இன்டெர்னல் யுனிக்ஸ் அட்மினாக இருந்ததால் அதற்கான வாய்ப்பு மிக குறைவு. இந்த இன்டெர்னல் சப்போர்ட் ல இருந்தாலே இது ஒரு பெரிய தொல்லைங்க, எங்கயும் அனுப்ப மாட்டாங்க (ப்ரோக்ராம் ல இருப்பவர்களுக்கு தான் வாய்ப்பு அதிகம்). இதனாலேயே எனக்கு விமான பயணம் அனுபவம் கிடைக்கவில்லை. அதற்கப்புறம் என்னோட குழுவில் எல்லோரும் போய்ட்டு வந்துட்டாங்க எனக்கு வாய்ப்பு கிடைக்கல. சரி நம்ம ராசி சுத்தி சுத்தி வேற அடித்ததால நானும் அதை பெருசா நினைக்கலை. சீ! இந்த பழம் புளிக்கும் icon smile என் முதல் விமான பயண அனுபவம் :))

இதை எல்லாம் ஒரு பெரிய விசயமாக !!! கருதி துக்கம் விசாரித்தவங்க பல பேர். என்னடா இவங்க தொல்லைன்னு இருந்தாலும், எனக்கும் இந்த விமானத்துல போய் எப்படி தான் இருக்கும் என்று பார்க்க உள்ளூர ஆசை தான். போனவங்க பல பேர் மச்சான்! அது செம கடிடா என்று கூறும் போது, அனுபவம் இல்லாததால் என்னடா சும்மா சீன் போடுறாங்கன்னு நினைத்துக்கொண்டேன்.

அப்புறம் நானும் பார்த்தேன் இவங்க அனுப்புற மாதிரி தெரியல, சரி நாம பெங்களூர் வது சும்மா போய் வருவோம்னு என்னோட நண்பர்கள் இருவருடன் முடிவு செய்து பெங்களூர் விமானத்தில் செல்ல முடிவு செய்தோம். பயண சீட்டு Rs 1500.

ஒரு சனிக்கிழமை காலையில் டெக்கான் நிறுவன விமானத்தில் போக முன்பதிவு செய்தோம். வெள்ளிக்கிழமை இரவு தூக்கமே வரலை, அடுத்த நாள் விமானத்தில் போவதை நினைத்து. நேரம் போகவே மாட்டேங்குது, என்னடா இது விடியவே மாட்டேங்குதுன்னு புலம்பிட்டே அப்படியே தூங்கிட்டேன். அப்புறம் என்னோட நண்பன் எழுப்பியதும் தான் அலறி அடித்துட்டு எழுந்தேன். உடனே குளித்து தயார் ஆகி துணி எல்லாம் எடுத்து வைத்து கொண்டு குளிர் கண்ணாடி (ஒரு பந்தா வேண்டாமா) அணிந்து கொண்டு புகைப்பட கருவி எல்லாம் எடுத்துக்கொண்டு மூவரும் உள்நாட்டு விமான நிலையம் சென்று விட்டோம். உள்ளே போகும் முன்பு நினைவாக புகைப்படம் எடுத்துக்கொண்டோம் (பின்னே பெரிய சாதனை இல்லையா எங்களுக்கு) அறிவிப்பு வராததால் உள்ளே காத்திருந்தோம், அறிவிப்பு வந்ததும் அனைத்து சோதனைகளும் முடிந்து விமானம் செல்ல பேருந்தில் கூட்டி சென்றார்கள்.

எனக்கு பயங்கர ஆர்வம் ஆகி விட்டது, நேரம் நெருங்க நெருங்க. பேருந்தில் இறங்கியதும் எல்லோரும் தட தடன்னு விமானம் நோக்கி ஓட ஆரம்பிச்சுட்டாங்க, கோட் சூட் போட்டவனும் ஓடுறான், சாதாரணமான ஆளும் ஓடுறான். எங்களுக்கு ஒன்றும் புரியலை, எதுக்கு ஓடுறாங்க? பயண சீட்டு தான் கையிலே இருக்கே! இருக்கை எண் உடன், அப்புறம் எதுக்கு ஒடுறாங்கன்னு எங்களுக்கு பயங்கர குழப்பம் ஆகி விட்டது.

மேலே ஏறியதும் தான் தெரிந்தது எங்க வேண்டும் என்றாலும் உட்கார்ந்து கொள்ளலாமாம். அடபாவிகளா! இது தெரியாம போச்சேன்னு நொந்துட்டு கிடைத்த இடத்தில் உட்கார்ந்து கொண்டோம். ஏன்டா! பேருந்துல தான் இப்படின்னா விமானத்திலும் இப்படி தானா என்று செம கோபம் வந்து விட்டது. நான் ஒரு பில்டப் ல வந்தா இப்படி சொதப்பியதில் செம காண்டாகி விட்டது. இதில் 50 பேர் உட்காரலாம் அவ்வளோதான்.

என் கனவு நிறைவேறும் நேரமும் வந்தது, அறிவிப்புடன் விமானம் ஓடுதளத்தில் மெதுவாக சென்று திடீரென செம வேகத்துடன் (வேகம்னா வேகம் அப்படி ஒரு வேகம்) ஓடி மேலே பறந்தது, எனக்கு அடி வயிற்றில் ஜிவ்வுனு இருந்தது. (பெரிய விமானத்தை விட இதில் வித்யாசம் அதிகம் என்று அடுத்த முறை பெரிய விமானத்தில் சென்ற போது தெரிந்தது, அதில் இப்படி இல்லை) நான் வேற பிக்கப் தான் கேள்வி பட்டு இருக்கேன் icon wink என் முதல் விமான பயண அனுபவம் :)) இந்த பிக்கப் மறக்க முடியாதது. இதெல்லாம் ஒரு 5 நிமிடம் தான் அதற்கப்புறம் ஒன்றுமே தெரியவில்லை, எதோ சாதாரணமா எப்போதும் போல் உட்கார்ந்து இருப்பதை போன்ற உணர்வே.

பணிப்பெண் வந்து அவசர காலத்தில் எப்படி நம்மை பாதுகாத்து கொள்வது என்று விளக்கினார்கள். அது வரை எதுவும் எனக்கு தோன்றவில்லை, இதை கேட்டவுடன் பயம் வந்து விட்டது, இப்போது பார்த்து தான் பல ஹாலிவுட் பட விமான விபத்து காட்சிகள் நினைவுக்கு வந்து என்னை பயமுறுத்தின. உள்ளூர நடுக்கம் இருந்தாலும் அதை வெளி காட்டிக்காமல் என் நண்பர்களுடன் பேசி கொண்டு இருந்தேன், பேசிட்டு ஜன்னல் பக்கம் திரும்பியதும் சிறிய விமானம் என்பதால் மூடப்படாத காத்தாடி அதி வேகமாக சுற்றியதை பார்த்து எனக்கு அடி வயிறு கலங்க ஆரம்பித்து விட்டது, எதாவது பறவை வந்து மோதி விடுமோ என்று செய்திகளில் படித்ததெல்லாம் அப்போது தான் நினைவுக்கு வந்து இம்சித்தது. பயத்தில் நான் அந்த பக்கமே திரும்பவில்லை. பணிப்பெண் சாப்பிட எதோ கொண்டு வந்தார்கள், பணம் கொடுக்க வேண்டும் என்றதால், அந்த எண்ணத்தையே கை விட்டேன். நாங்களே கஷ்டப்பட்டு விமான பயண சீட்டு வங்கி இருக்கோம், இதுல இது வேறயா…

இன்னும் சிறிது நேரத்தில் இறங்க போகிறோம் என்று அறிவித்தார்கள், என்னடா! இது அதுக்குள்ளே பெங்களூர் வந்து விட்டதா ன்னு ஆச்சர்யம் ஆகி விட்டது, 45 நிமிட பயணம் தான் சென்னையில் இருந்து. விமான இறங்கும் போது தட தடன்னு செம சத்தம் எனக்கு தூக்கி வாரி போட்டது, அய்யயோ இப்படியே ஒரேடியா மேலே கூட்டிட்டு போய்டுனுவாக போல இருக்கேன்னு பயத்துல நாக்கெல்லாம் உலர்ந்து விட்டது. ஏற்கனவே பயந்து போய் இருந்த நான், இன்னும் பயந்து விட்டேன். எனக்கு தெரிந்த எல்லா கடவுளையும் கும்பிட்டு விட்டேன். அது வரை சிரித்து கொண்டு இருந்த என் நண்பர்களும் கப் சிப் னு ஆகிட்டாங்க. சிரிப்பு போய் முகம் எல்லாம் வெளிறி விட்டது. அப்புறம் ஆடிட்டே தட தட ன்னு இறங்கி விட்டது (சிறிய விமானத்தில் இப்படி தான் இருக்கும் என்று பிறகு கூறினார்கள்), எனக்கு இறங்கியதும் தான் உயிரே வந்தது.

இந்த மாதிரி முதல் அனுபவம் எனக்கு பயத்துடன் அமைந்து விட்டது. என்னோட சிங்கப்பூர் விமான பயணத்தை என்னுடைய அடுத்த இடுகையில் கூறுகிறேன் icon biggrin என் முதல் விமான பயண அனுபவம் :))

No related posts.

{ 15 comments… read them below or add one }

♠புதுவை சிவா♠ May 9, 2008 at 7:29 PM

பேருந்தில் இறங்கியதும் எல்லோரும் தட தடன்னு விமானம் நோக்கி ஓட ஆரம்பிச்சுட்டாங்க, கோட் சூட் போட்டவனும் ஓடுறான், சாதாரணமான ஆளும் ஓடுறான். எங்களுக்கு ஒன்றும் புரியலை, எதுக்கு ஓடுறாங்க? பயண சீட்டு தான் கையிலே இருக்கே! இருக்கை எண் உடன், அப்புறம் எதுக்கு ஒடுறாங்கன்னு எங்களுக்கு பயங்கர குழப்பம் ஆகி விட்டது.மேலே ஏறியதும் தான் தெரிந்தது எங்க வேண்டும் என்றாலும் உட்கார்ந்து கொள்ளலாமாம். அடபாவிகளா! இது தெரியாம போச்சேன்னு நொந்துட்டு கிடைத்த இடத்தில் உட்கார்ந்து கொண்டோம். ஏன்டா! பேருந்துல தான் இப்படின்னா விமானத்திலும் இப்படி தானா என்று செம கோபம் வந்து விட்டது. நான் ஒரு பில்டப் ல வந்தா இப்படி சொதப்பியதில் செம காண்டாகி விட்டது. இதில் 50 பேர் உட்காரலாம்

your experienc is very funny
When I read this realy enjoy it

Thank you
write in Singapor trip
siva
Pondicherry

Reply

PPattian : புபட்டியன் May 9, 2008 at 7:52 PM

நல்லாயிருக்கு உங்க அனுபவம்… :)

நெஜமாவே ஒடிப்போய் எடம் புடிக்கணுமா?? எல்லா உள்நாட்டு விமானத்திலயும் அப்படித்தானா?

Reply

கிரி May 9, 2008 at 8:35 PM

சிவா உங்க வருகைக்கு நன்றி.

மிக விரைவில் என் சிங்கப்பூர் அனுபவத்தை எழுதுகிறேன். படித்து விட்டு உங்க கருத்தை சொல்லுங்கள்.

Reply

கிரி May 9, 2008 at 8:40 PM

நான் எதோ பதிவு எழுதணும் என்பதற்காக மிகை படுத்தி கூறவில்லை. உண்மையிலேயே எல்லோரும் ஓடித்தான் வசதியான இடம் பிடித்தாங்க, நம்பினால் நம்புங்க. மற்றவங்களுக்கு எப்படின்னு தெரியல மற்றும் மற்ற விமானங்கள் எப்படின்னும் தெரியல.

நான் அது ஒரு முறை மட்டுமே உள்நாட்டு விமானத்தில் போனேன், அதன் பிறகு போனதெல்லாம் வெளிநாட்டு விமானம். அதிலேயும் எனக்கு செம காமெடி அனுபவம் மற்றும் நொந்து போன அனுபவங்கள் உண்டு அதை அடுத்த இடுகையில் கூறுகிறேன்.

உங்கள் வருகைக்கு நன்றி பட்டியன்

Reply

Murali May 10, 2008 at 3:35 PM

Very interesting to read your first experience. Andha bandhaa kaattinavangalla naan illaiyae giri

Reply

கிரி May 10, 2008 at 4:23 PM

ஹா ஹா ஹா

Reply

மங்களூர் சிவா May 22, 2008 at 5:55 PM

/
பேருந்தில் இறங்கியதும் எல்லோரும் தட தடன்னு விமானம் நோக்கி ஓட ஆரம்பிச்சுட்டாங்க, கோட் சூட் போட்டவனும் ஓடுறான், சாதாரணமான ஆளும் ஓடுறான். எங்களுக்கு ஒன்றும் புரியலை, எதுக்கு ஓடுறாங்க? பயண சீட்டு தான் கையிலே இருக்கே! இருக்கை எண் உடன், அப்புறம் எதுக்கு ஒடுறாங்கன்னு எங்களுக்கு பயங்கர குழப்பம் ஆகி விட்டது.மேலே ஏறியதும் தான் தெரிந்தது எங்க வேண்டும் என்றாலும் உட்கார்ந்து கொள்ளலாமாம். அடபாவிகளா! இது தெரியாம போச்சேன்னு நொந்துட்டு கிடைத்த இடத்தில் உட்கார்ந்து கொண்டோம். ஏன்டா! பேருந்துல தான் இப்படின்னா விமானத்திலும் இப்படி தானா என்று செம கோபம் வந்து விட்டது. நான் ஒரு பில்டப் ல வந்தா இப்படி சொதப்பியதில் செம காண்டாகி விட்டது.
/

கொக்கா மக்கா இதுக்குதான் கருமம் இந்த ப்ளைட்ல இன்னும் ஏறவே இல்லை

:) )))))))))))))

Reply

கிரி May 22, 2008 at 5:59 PM

அதெப்படி விட்டுருவோமா !!! நீங்களும் எங்க ஜோதியில் ஐக்கியமாக என் மனமார்ந்த !!! வாழ்த்துக்கள் :-)

Reply

வால்பையன் March 31, 2009 at 8:01 PM

சூப்பர் அனுபவம் தலைவா!
நானும் இந்த வருடத்தில் போய் வருவேன் என்று நினைக்கிறேன்!
போய் வந்து எழுதுகிறேன்!

Reply

ராஜ நடராஜன் March 31, 2009 at 9:22 PM

//மேலே ஏறியதும் தான் தெரிந்தது எங்க வேண்டும் என்றாலும் உட்கார்ந்து கொள்ளலாமாம். அடபாவிகளா! //

கிரி!வால்பையன் வீட்டுக்குப் போயிட்டு சொல்லாமக் கொள்ளாம இங்கே வந்து விட்டேன்.பாதி படித்ததும் இதென்ன துண்டு போட்டுக்கவா மாதிரி இருக்கேன்னு பின்னூட்டத்துக்கு ஓடி வந்து விட்டேன்.
விமானத்திலும் ஆள் ஆளுக்கு ஓடுறாங்களேன்னு நானும் பம்பாயிலிருந்து கோவைக்கு ஏர்டெக்கான்ல வரும்போது நினச்சேன்.

Reply

ராஜ நடராஜன் March 31, 2009 at 9:28 PM

//விமான இறங்கும் போது தட தடன்னு செம சத்தம் எனக்கு தூக்கி வாரி போட்டது, //

கிங் பிஷர்,டெக்கான் விமான அனுபவங்களை அப்படியே எழுத்தில் கொண்டு வந்துள்ளீர்கள்.ரசித்தேன்:)

Reply

வடுவூர் குமார் April 12, 2009 at 12:22 PM

இன்றுவரை இந்த விமான ஆசை போகவில்லை என்றால் பாருங்களேன் ஆதாவது ஓட்டிப்பார்கனும் என்ற ஆசை.
இதற்கான மென்பொருடகள் (இலவசம்) இலவசமாக இருந்தாலும் அதைப் படித்து அதை கீபோர்ட் வழியாக செயல்படுத்தும் போது நாக்கு வெளியில் வந்துவிடுகிறது.
சிங்கையில் சுற்றுப்பயணிகள் செல்லும் இடத்தில் (பெயர் ஞாபகத்து வரமாட்டேன் என்கிறது) விமானம் ஓட்ட ஒரு இயந்திரம் வைத்துள்ளார்கள் அருமையாக இருக்கும்.

Reply

r.v.saravanan kudandhai March 13, 2010 at 5:22 PM

நான் இன்னும் விமானத்தில் செல்லவில்லை செல்லும் காலம்
எப்போது வரும் என்றும் தெரியவில்லை

Reply

solarajac March 2, 2011 at 3:28 PM

கிரி ,
சூப்பரா அலுதுரிங்க valthukal

Reply

rajeshkumar March 28, 2011 at 3:37 PM

வெரி வெரி ஜோக் யுவர் பஸ்ட் experiance

Reply

Leave a Comment

Previous post:

Next post:

Mail Twitter Facebook RSS Feed